திருத்தணி: திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் தேர்திருவிழா நடக்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலின் சிறப்பு பெற்ற சித்திரை பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மூலவருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டது. முருகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கொடிமரத்திற்கு எதிரில் எழுந்தருளினார். கொடி மரம் மலர்களால் அலங் கரிக்கப்பட்டு கோயில் அர்ச்சகர்கள் ஹோம பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. விழாவில், திருக்கோயில் பேஸ்கார் தாமோதரன் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் முருகர் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழா துவங்கியுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தும் விரதமிருந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் தேர்திருவிழா, 8ம்தேதி இரவு தெய்வானை திருகல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் சு.ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
The post திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.