ஈரோடு: கதவை திறக்க நேரமானதால் மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் கணேஷ்ராஜ் (40). இவர், ஸ்பின்னிங் மில்லில் பிட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜானகி (30). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், தனது வீட்டில் ரத்தவெள்ளத்தில் மனைவி ஜானகி இறந்துகிடப்பதாக கடந்த 29ம்தேதி பெருந்துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் சென்று ஜானகியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஜானகியை கொலை செய்து நகை, பணத்தை திருடிச் சென்றார்களா என்று விசாரணை நடத்தியபோது வீட்டில் எந்த பொருட்களும் திருடு போகவில்லை என்பது உறுதியானது. இதுதொடர்பாக ஜானகியின் கணவர், கணேஷ்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது அவர்தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: சம்பவத்தன்று கணேஷ்ராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து நீண்டநேரம் கதவை தட்டியபிறகே ஜானகி கதவை திறந்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கணேஷ்ராஜ் ஜானகியை திட்டியுள்ளார். இதன்பிறகு கணேஷ்ராஜ், வீட்டிற்குள் இருந்த அவரது மகனின் கட்டை நடைவண்டி(கட்டையால் ஆனது) எடுத்து ஜானகியின் தலையில் தாக்கியதில் தலையில் காயம்பட்டு ஜானகி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்பின்னர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தான் வேலை முடிந்துவந்தபோது, வீட்டின் முன்புற கதவு தாழிடப்பட்டு இருந்ததாகவும் உள்ளே சென்று பார்த்தபோது ஜானகி வீட்டில் ரத்தக் காயத்துடன் மயங்கி கிடந்ததாக தெரிவித்து, நாடகமாடி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கணேஷ்ராஜை நேற்றிரவு கைது செய்தனர்.
The post கதவை திறக்க நேரம் ஆனதால் மனைவியை கொன்று நாடகம்: கொடூர கணவர் கைது appeared first on Dinakaran.