
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மலாலிநத்தம் சித்தேரிக்கரை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ஞான சக்தி நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வருடாந்திர மகா கும்பாபிஷேகம் மற்றும் பால்குடம் எடுக்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு யாக சாலைகள் அமைத்து 108 கலசங்களுடன் கூடிய மகா கும்ப கலசம் நிறுத்தப்பட்டு பல்வேறு வேள்விகள் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து 11-ஆம் தேதி காலை அருள்மிகு தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் தலைமையில் கும்ப கலசம் புறப்பட்டு நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் போது உயிருடன் உள்ள நல்லபாம்பு எடுத்து வரப்பட்டு தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் மற்றும் பக்தர்கள் முன்பு மேஜை மீது வைக்கப்பட்டது. அப்போது நல்ல பாம்பு படம் எடுக்காமல் அமைதியாக படுத்திருந்ததால் பாம்பை பிடித்து வந்த நபர் பாம்பின் முன்பு துணியை அசைத்து காட்டி அதனை எரிச்சல் அடைய செய்தார். தொடர்ந்து பாம்பின் மீது பூக்கள் தூவப்பட்டு பூஜை செய்து கொண்டிருந்த போது பாம்பு அங்கிருந்து நகர்ந்து தான் அடைத்து வைத்து எடுத்து வரப்பட்ட ஓலை பெட்டியின் உள்ளே படுக்க சென்ற சென்ற நிலையில் பாம்பை எடுத்து வந்த நபர் அதனை கையால் உலுக்கி மீண்டும் படம் எடுக்க செய்தார்.
பின்னர் நல்ல பாம்பிற்கு கற்பூரம் ஊதுவர்த்தி ஆகியவற்றால் தீபாராதனை காட்டிய பின்னர் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள் நல்ல பாம்பை கையால் தூக்கி பக்தர்கள் முன்பு காட்டியும், தனது கழுத்தில் பாம்பை மாலையாக போட்டுக்கொண்டு சிவன் போல் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் வனத்துறையினர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் கடந்த 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பெண் சாமியார் ஒருவர் நல்லபாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு அருள்வாக்கு அளித்தார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலான நிலையில் பெண் சாமியார் கபிலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் செங்கல்பட்டில் நல்ல பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு சாமியார் ஒருவர் பக்தர்களுக்கு அருளாசி தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.