துருக்கிக்கு எதிராக நாடு முழுவதும் வேகமெடுக்கும் ஹேஸ்டேக்

2 hours ago 5

புதுடெல்லி,

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக கடந்த வாரம் புதன்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு போரை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை வைத்தநிலையில், இந்தியா அதற்கு ஒப்புக்கொண்டது. ஆனாலும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி டிரோன் தாக்குதலுக்கு முயன்று வருகிறது. இதற்கு உரிய முறையில் தக்க பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்தியாவுடன் மோதல் நடந்து கொண்டு இருந்தபோது துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. துருக்கி அதிபர் எர்டோகன் நேரடியாக பாகிஸ்தான் பிரதமரை ஷெபாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்டு பேசி ஆதரவை வழங்கினார்.

கடந்த 2023ம் ஆண்டு துருக்கி கடுமையான பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, களமிறங்கிய இந்தியா அந்நாட்டிற்கு உதவி செய்ததுடன் மீட்பு பணியிலும் ஈடுபட்டது. ஆனால் அந்த உதவியை சிறிதும் நினைத்துப் பார்க்காத துருக்கி காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தானையே ஆதரிப்பதுடன், அந்நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்தியா மீது பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் துருக்கி வழங்கியிருந்ததை ராணுவத்தினர் உறுதி செய்தனர். அதேபோல், அஜர் பைஜான் நாடும் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.

இது குறித்த தகவல் வெளியானதும் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர், மேற்கண்ட இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளத்தில் ஏராளமானோர் கருத்து பதிவிட அது வைரலாக துவங்கியது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து துருக்கிக்கு 2,87,000 பேர் சுற்றுலா சென்றனர். அதேபோல் அஜர் பைஜான் நாட்டிற்கும் 2,43,000 பேர் சுற்றுலா சென்றனர்.

தற்போது, இந்தியர்கள் கோபம் காரணமாக இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோதாது என்று சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் சில நிறுவனங்களும் அந்நாட்டிற்கு சுற்றுலா ஏற்பாடு செய்வதை ரத்து செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாட்டு சுற்றுலா துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் துருக்கி நாட்டில் இருந்து வந்த ஆப்பிளை மும்பை வியாபாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதன்படி பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்ததை கண்டித்து மும்பை பழ வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.

துருக்கி ஆப்பிள்களுக்கு பதில் இமாச்சல பிரதேசத்தில் இருந்தும், வேறு இடங்களில் இருந்தும் ஆப்பிள்களை வாங்குவோம் என்றும், இதனால் 1,200 முதல் 1,500 கோடி ரூபாய் வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் என மும்பை பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டை வைத்து துருக்கி வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் கல்லா கட்டிவரும்நிலையில், அந்நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவதால் #BoycottTurkey என்று ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூகவலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

Read Entire Article