செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அடுத்தடுத்து மூன்று கடைகளின் பூட்டை உடைத்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு நகர காவல் எல்லைக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம் மகாதேவன் தெருவில் வசித்து வருபவர் ஜமால் முகமது என்பவரது மகன் அப்துல்லா (26). இவர், செங்கல்பட்டு ராஜாஜி தெருவில் செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு எப்போதும் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று காலை அப்துல்லாவின் செல்போன் கடை இரும்பு ஷட்டர் திறந்து கிடப்பதாக எதிர்க்கடைக்காரர் தகவல் தெரிவித்து இருக்கிறார். உடனே அவர் கடைக்கு வந்து பார்த்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது தலா ரூ.30ஆயிரம் வீதம் 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 செல்போன்கள் திருடுபோனது தெரியவந்தது.
அதேபோல், செல்போன் கடைக்கு பக்கத்தில் செங்கல்பட்டு திருமணி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி பத்மா நடத்திவரும் பியூட்டி பார்லர் கடை ஷட்டரும் உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த 8 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போயுள்ளது. மேலும், ராஜாஜி தெருவுக்கு அடுத்த தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் கடையின் பூட்டை உடைத்து 7 ஆயிரத்து 800 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்துல்லா, பத்மா மற்றும் விஷ்ணு ஆகியோர் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post செங்கல்பட்டில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், பணம் கொள்ளை: வியாபாரிகள் பீதி appeared first on Dinakaran.