![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/23/35388964-3.webp)
மும்பை,
சர்ச்சைக்கு மிகவும் பெயர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்திரம் 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்.அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி உள்ளார். 2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் ஆபாச படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர், தொடர்ந்து அதே போன்ற படங்களையே இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கிளைமேக்ஸ், நேக்கட், டேஞ்சரஸ் என பல படங்களை இயக்கி ஆர்ஜிவி வேர்ல்ட் என்பதையே புதிதாக உருவாக்கியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு ராம் கோபால் வர்மா மீது செக் பவுன்ஸ் வழக்கு தொடரப்பட்டது. மகேஷ் சந்திர மிஷ்ரா என்பவர் ஶ்ரீ என்கிற நிறுவனத்தின் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்தார். 5000 ரூபாய் பிணைத் தொகையாக செலுத்தி இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்தார் ராம் கோபால் வர்மா. கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த விசாரணையில் ராம் கோபால் வர்மா ஆஜராகாத காரணத்தினால் நீதிபதி அவருக்கு 3 மாதம் நான் பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்கினார். கூடுதலாக மனுதாரருக்கு ராம் கோபால் வர்மா ரூ 3.72 லட்சம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிணையில் வெளிவர முடியாத வழக்காக இது அமைந்துள்ள நிலையில், ராம் கோபால் வர்மாவை போலீஸார் கைது செய்ய நேரிடும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.