*மாக்கினாம்பட்டியில் 53 மி.மீ மழைப்பதிவு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கோடை மழையால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து சரியான காலத்தில் பெய்தது. அதன்பின் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மழையின்றி இன்றி, கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதற்கிடையே சித்திரை பட்டத்தை எதிர்நோக்கி பயிர் சாகுபடி மேற்கொள்ள,விவசாயிகள் மழையை எதிர் பார்த்திருந்தனர். இதில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இடியுடன் கூடிய கனமழை சில மணி நேரத்திற்கு மேல் பெய்தது.
அதன் பின் கடந்த சில நாட்களாக, பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், மாலை நேரத்தில் அவ்வபோது கனமழை பொழிவது தொடர்ந்தது. இதில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில், திடீரென பலத்த காற்று வீசியது.
சூறாவளிக் காற்றாக உருவெடுத்ததுடன் கன மழை பெய்தது. முன்னதாக, பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.பலத்த காற்றுடன் கன மழை பெய்ததால், நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தின் பல இடங்களில்,ரோட்டோரம் நின்ற ராட்சத மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளது. இதில், இலகுவான மரங்கள் சில வேருடன் சரிந்தது. பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி செல்லமுத்து நகர் பகுதியில் நின்ற ஒரு தென்னை மரம் திடீரென வேருடன் சாய்ந்தது. இதனால், அந்த வழியாக சென்ற மின்கம்பிகள் அறுந்தது.
முன்னதாகவே மின்தடை ஏற்படுத்தப்பட்டதால், பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.இருப்பினும், அப்பகுதியில் விரைந்து மின்வினியோக பணியை மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், மகாலிங்கபுரம் மற்றும் வெங்கடேசா காலனி உள்ளிட்ட பல பகுடியிருப்பு மிகுந்த இடங்களில் ரோட்டோரம் நின்ற ராட்சத மரம் முறிந்து விழுந்தததால்,அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழையளவு குறைவாக இருந்தாலும்.
சமவெளி பகுதியான பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் கன மழை பெய்துள்ளது. பொள்ளாச்சி பகுதியில் அதிகபட்சமாக 53 மில்லிமீட்டர் என்ற அளவில் மழைப் பதிவாகியுள்ளது.
நேற்று காலை நிலவரபடி மழையளவு வருமாறு: பரம்பிக்குளம் 4மிமீ(மில்லி மீட்டரில்), பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி 53மிமீ, ஆழியார் 27மிமீ,நெகமம் 23மிமீ,மேல்நீரார் 12மிமீ,பெருவாரிபள்ளம் 3மிமீ, தூணக்கடவு 4மிமீ,காடம்பாறை 10மிமீ,நல்லூர் 18மிமீ, உப்பார் 15மிமீ,நல்லாறு 23மிமீ,நவமலை 13மிமீ,அப்பர் ஆழியார் 11மிமீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
The post சூறாவளி காற்றுடன் கோடை மழை பல இடங்களில் மரங்கள் முறிந்தன appeared first on Dinakaran.