சூயஸ் கால்வாய் வழியாக சென்ற இஸ்ரேல் போர்க்கப்பல்.. எகிப்து அரசை திட்டித்தீர்த்த இணையவாசிகள்

1 week ago 3

கெய்ரோ:

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையாக திகழ்கிறது. மேலும் எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் இந்த கால்வாயை பராமரித்து நிர்வகிக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் சூயஸ் கால்வாயில் இஸ்ரேல் நாட்டின் போர்க்கப்பல் சென்றது தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த எகிப்தியர்கள் பலரும், இஸ்ரேல் போர்க்கப்பல் செல்வதற்கு அனுமதி அளித்த எகிப்து அரசாங்கத்தை தீட்டி தீர்த்தனர்.

இஸ்ரேல் போர்க்கப்பலை நமது நாட்டின் சூயஸ் கால்வாய் வழியாக செல்ல எப்படி அனுமதிக்கலாம்? என பலர் கேள்வி கேட்டு வறுத்தெடுத்தனர். மத்திய கெய்ரோவில் திரண்ட சிலர், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சூயஸ் கால்வாய் ஆணையம் விளக்கம் அளித்தது. அதில், சூயய் கால்வாயில் சுதந்திரமாக செல்ல அனைத்து வணிக கப்பல்களுக்கும், ராணுவ கப்பல்களுக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தது. சூயஸ் கால்வாயை கடக்கும் கப்பல்கள் வணிக ரீதியாகவோ அல்லது ராணுவ ரீதியாகவோ இருந்தாலும், அவற்றின் நாட்டை பொருட்படுத்தாமல், சர்வதேச ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது சூயஸ் கால்வாய் ஆணையத்தின் கடமை என்றும் கூறியிருக்கிறது.

காசா மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பரவலாக மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, காசா மீதான ராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாக எகிப்து இருப்பதாக சமூக ஊடகங்களில் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இஸ்ரேலுக்கு வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பல், அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு வலுப்பெற்றது.

இந்த குற்றச்சாட்டை எகிப்து ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது. எகிப்து போக்குவரத்து அமைச்சகமும் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது. அதில், எகிப்தின் ராணுவ உற்பத்தி அமைச்சகத்திற்காக சரக்குகளை இறக்குவதற்காக அந்த கப்பல் நிறுத்தப்பட்டதாகவும், அங்கிருந்து துருக்கிக்கு புறப்பட்டு செல்லும்படி கோரிக்கை விடுத்ததாகவும் போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article