சூடானில் சிறை மீது டிரோன் தாக்குதல்; 20 பேர் பலி

6 hours ago 2

கார்டூம்,

சூடான் நாட்டில் வடக்கு கோர்டோபேன் மாகாணத்திற்கு உட்பட்ட ஒபெய்த் நகரில் உள்ள முக்கிய சிறைச்சாலை மீது அந்நாட்டு துணை ராணுவத்தின் அதிரடி ஆதரவு படையினர் டிரோன் (ஆளில்லா விமானம்) கொண்டு தாக்குதல் நடத்தினர் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில், சிறை கைதிகள் 20 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர். சூடானில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே தலைநகர் கார்டூம் நகரில் மோதல் வெடித்தது. இது பிற பகுதிகளுக்கும் பரவியது.

இந்த உள்நாட்டு போரில் 24 ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. 1.3 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி தப்பியுள்ளனர். 40 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். சூடானின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா. மற்றும் சர்வதேச உரிமை குழுக்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தியில், இந்த மோதலால் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் மற்றும் உள்நோக்கத்துடனான படுகொலைகள் ஆகியன அதிகரித்து காணப்படுகின்றன. போர் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கு எதிரான குற்றங்களும் பரவலாக அதிகரித்து உள்ளன என தெரிவித்து உள்ளது.

Read Entire Article