சுற்றுலாவில் சூப்பர் கிங் ஆகிறது ராமநாதபுரம் பொழுதுபோக்கு பீச்சுடன் நீர்சறுக்கு பயிற்சி அகாடமி

1 month ago 5

* மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும், சர்வதேச தரத்தில் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் அரியமான் கடற்கரை அருகே பிரப்பன் வலசை வடக்கு கடலோரப் பகுதியில், இளைஞர்களை ஊக்குவிக்கவும், சுற்றுலாப்பயணிகளை கவரும்வகையில் பொழுதுபோக்கு பீச் அமைப்பது மற்றும் நீர்ச்சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட கடல் சார்ந்த விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து பல கோடி மதிப்பிலான சுற்றுலா திட்டத்தில் நீர் சறுக்கு சாகச பயிற்சி அகாடமி பணிகள் விரைவில் துவக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பீச்களின் சொர்க்கம்…இந்தியாவின் கடைக்கோடியில் அமைந்துள்ள அழகிய தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்தும், வணிகமும் இருந்தது. உலக நாடுகளையே கவரும் வகையில் விளங்கி வந்த பகுதியான தனுஷ்கோடி, கடந்த 1964 புயலில் அழிந்து போனதன் சுவடுகளை இன்றளவும் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து பார்த்து செல்கின்றனர்.

இதனால், ராமேஸ்வரம் தீவுப்பகுதியை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென்பது அப்பகுதியினரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் பல இடங்களில் பீச் அமைத்து சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் விளையாட்டு தலங்கள் உருவாக்கப்பட்டன. ரூ.35 கோடி நிதியில்… இதனையடுத்து பாம்பன் குந்துகால் பகுதியில் குருசடை தீவிற்கு படகு சவாரி, மண்டபம் கடற்கரை பேரூராட்சி பூங்கா, மண்டபம் பூமரிச்சான் தீவிற்கு படகு சவாரி, அரியமான் பீச் உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் பல சுற்றுலாத்தலங்களை தமிழக அரசின் ஏற்பாட்டுடன் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, மண்டபம் ஒன்றியம் பிரப்பன்வலசை ஊராட்சிக்கும், சாத்தக்கோன் வலசை ஊராட்சிக்கும் இடையே அமைந்துள்ள கடற்பரப்பில் குறைந்தது 2 கிமீ தூரத்திற்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பெரிய பீச் ஒன்றை உருவாக்கவும், அதில், கடல் நீர் விளையாட்டு அரங்கம், படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு தலங்களாக மாற்றும் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.35 கோடிக்கும் அதிகமான தொகை அறிவிக்கப்பட்டது.

அகடாமிக்கு டெண்டர் பிரப்பன்வலசையில் விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக 6 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக கடலோரப் பகுதியில் அருகாமையில் ஒலிம்பிக் விளையாட்டு நீர் சறுக்கு பயிற்சி அகடாமி அமைப்பதற்கு சமீபத்தில் தனியார் நீர் சறுக்கு விளையாட்டு பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்பு பணிகளை துவங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் விரைவில் நடைபெற உள்ளது.

பணிகள் முடிந்ததும், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அலைகள் அதிகமில்லை… ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடலோரப்பகுதி கட்டமைப்பாக அமைந்துள்ளது. ஆனால் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை நிர்வாகம், தமிழக முதல்வர் அறிவித்த விளையாட்டு மற்றும் சுற்றுலா மையங்களை அமைப்பதற்கு பிரப்பன்வலசை வடக்கு கடலோரப் பகுதியை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

வடக்கு கடலோர பகுதி கடல் அலைகள் அதிகமாக இருக்காது. மிகவும் அமைதியான கடல் பரப்பாக இருக்கும். பாறைகள் அதிகமாக இல்லை. அதுபோல இந்த பயிற்சி மையம் அமைக்க உள்ள பகுதியில் அருகாமையில் அரியமான் பீச் பகுதி உள்ளது. பயிற்சி மையம் அமைய உள்ள கடல் பகுதியில் ஏறத்தாழ 5 முதல் 10 கிமீட்டருக்கு கடலில் பாறைகள் மற்றும் மீனவர்கள் அதிகமான மீன்பிடித்தொழில்கள் எதுவும் கிடையாது. இதனால் இந்த கடலில் பயிற்சியாளர்களுக்கு நீர் சறுக்கு மற்றும் கடல் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்கு மிகவும் இலகுவாகவும், முழுமையான பயிற்சிகள் அளிக்கவும் வசதிகள் இருக்கும்.

சுற்றுலாப்பயணிகளை கவர… கடலோரப் பகுதிக்கு அருகாமையில் பறந்த நிலப்பரப்பும் அரசுக்கு சொந்தமாக உள்ளது. மேலும் ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 5 கிமீ தொலைதூரத்தில் இந்த விளையாட்டு பயிற்சி மையம் அமைக்கும் இடம் அமைந்துள்ளது. இதனையடுத்து பரந்த கடல் பரப்பையும், நிலப்பரப்பையும் மையப்படுத்தி, பிரபல சுற்றுலா தலமான ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பிரப்பன்வலசை கடல் பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களை துவங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

இளைஞர்களை ஊக்குவிக்க… ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்தில் தென் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள காரான், கோரவள்ளி, வெள்ளரி ஓடை, புதுமடம், மானாங்குடி, நொச்சியூரணி, சாத்தக்கோன்வலசை, வேதாளை, மரைக்காயர்பட்டினம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், வடக்கு கடலோரப் பகுதியில் அருகாமையில் அமைந்துள்ள அரியமான், இருமேனி, பிரப்பன்வலசை, உச்சிப்புளி, நாகாச்சி, ஆற்றாங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த மீனவ குடும்பத்தினர் பெரும்பாலும் பள்ளி படிப்பை முடித்து கடல் தொழிலில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை தேடி செல்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கடலோடு முடங்கி விடுகிறது. பிரப்பன்வலசையில் அமையும் நீர் சறுக்கு விளையாட்டு பயிற்சி மையம், மீனவ இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும். மீன்பிடிப்போடு கடல் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் இளைஞர்களுக்கு மட்டுமே இந்த கடலின் தன்மைகள் மற்றும் கடலின் நீரோட்டங்கள் பற்றி அதிகமாக தெரியும். அதனால்தான் இந்த விளையாட்டுகளை கடலில் விளையாடுவதற்கும் அதிகமான அச்சம் இல்லாத ஒரு மனப்பக்குவமும் கிடைக்கும்.

இளைஞர்கள் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி எடுக்கும்பட்சத்தில் ஒரு சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கப்படுவார்கள். நீர் சறுக்கு விளையாட்டு பயிற்சியில் கற்றுக்கொண்டு மீனவ இளைஞர்கள் சிறந்த பயிற்ச்சியாளர்களாக தேர்வாகும்பட்சத்தில் தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் நடைபெறும் நீர் சறுக்கு விளையாட்டுப் போட்டிகளிலும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்களுடைய தலைசிறந்த வீரர்களாக மாற்றும் வகையில் பயிற்சி அகாடமி அமையும். முதல்வரின் இந்த அறிவிப்பின்மூலம் ஏற்கனவே சுற்றுலா அளவில் பிரபலமாகி வரும் ராமநாதபுரம் மாவட்டம், மேலும் மெருகேறும் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

The post சுற்றுலாவில் சூப்பர் கிங் ஆகிறது ராமநாதபுரம் பொழுதுபோக்கு பீச்சுடன் நீர்சறுக்கு பயிற்சி அகாடமி appeared first on Dinakaran.

Read Entire Article