டிஜிட்டல் வளர வளர அதன் ஆபத்துகளும் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. இதற்கு என்னதான் தனிநபர்கள் பாதுகாப்பாக இருக்க முயற்சித்தாலும் இன்னமும் கிராமங்களில் உள்ள எளிய மனிதர்களால் இந்த டிஜிட்டல் ஆபத்துகளை அவ்வளவு சுலபமாகக் கடக்க முடியவில்லை. ஒவ்வொரு மணி நேரத்திலும் எத்தனையோ ஆயிரம் மக்கள் தங்களுக்கே தெரியாமல், அறியாமல் தாங்கள் உழைத்த பணத்தை இந்த டிஜிட்டல் யுகத்தில் இழக்கிறார்கள். அதற்குதான் உதவ இருக்கிறது ‘சஞ்சார் சாதி’ செயலி. போலி அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் செல்போன் செயலி மற்றும் 2.7 லட்சம் கிராமங்களை இணைக்கும் இணையவழி சேவை 2.0 திட்டம் ஆகியவற்றை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா தொடங்கி வைத்திருக்கிறார். மத்திய தகவல் தொடர்புத்துறை சார்பில் தேசிய இணையவழி சேவை 2.0 மற்றும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான ‘சஞ்சார் சாதி’ செல்போன் செயலி திட்டங்கள் விரைவில் இந்தியாவில் செயல்பட இருக்கின்றன. இதன் மூலம் செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவு செய்வதன்மூலம், அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் நமது பெயர் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தால், அதையும் கண்டறிந்து துண்டித்துவிடலாம்.
The post சஞ்சார் சாதி! appeared first on Dinakaran.