பொங்கல் என்றால் விவசாயம், சர்க்கரைப் பொங்கல், கரும்பு, இவைகளுக்கு அடுத்து நமக்கெல்லாம் மனதில் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள், தமிழகத்தின் சில கிராமங்கள் என ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். எனில் அவற்றை தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து டிவியில் பார்த்து ரசிப்பதும் பொங்கல் பண்டிகையின் முக்கியமான ஒரு அங்கம். அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி களில் எப்போதும் பெண்கள் வளர்த்த காளைகள் சீறிப்பாய்வதை ஒவ்வொரு வருடமும் நாம் சிலாகித்துப் பேசுவதுண்டு.இந்த வருடம் இன்னும் சற்று சிறப்பாக ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக பெண் வர்ணனையாளர்களான கோவில்பட்டி அன்னபாரதி, லாவண்யா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, மாடுபிடி வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர். கிரிக்கெட், ஜல்லிக்கட்டு, விளையாட்டுப் போட்டிகள் பல என எங்கும் இன்னமும் ஆண்கள் அளவுக்கு பெண் வர்ணனையாளர்கள் அதிகரிக்கவில்லை. அந்த வகையில் இந்த வருட ஜல்லிக்கட்டில் பெண் வர்ணனையாளர்கள் அன்னபாரதி, லாவண்யா இருவரும் வடிவேலு , வசனங்கள், மதுரை மண்ணுக்கே உரிய உச்சரிப்புகள் சகிதமாக அலப்பறைக் காட்டி ஜல்லிக்கட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். அன்னபாரதி இலக்கிய மேற்கோள்கள் காட்டி பேசியது இன்னும் பாராட்டுகளைப் பெற்றது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் கூட நிறைய பதிவுகள், பாராட்டுகள், என வைரலாகிக் கொண்டிருக்கிறது.பட்டி மன்ற பேச்சாளர்களாக இருந்த இந்த இரு பெண்களில் அன்னபாரதி ஜல்லிக்கட்டு வர்ணனை செய்வது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு கடந்த வருடம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி ஏற்பாட்டின்பேரில் எம்.சத்திரப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில் அன்னபாரதி வர்ணனையாளராக பேசினார். தற்போது பொங்கல் சிறப்பு ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பிலும் பேசியதில் எங்கும் டிரெண்டிங். “நீ பேசுக்கா, பேசுக்கா” என மைதானத்தில் இளைஞர்கள் கொடுத்த உற்சாகம்தான் தாங்கள் தொடர்ந்து சோர்வடையாமல் பேசக் காரணம் என்கிறார்கள் இந்த வீரப் பேச்சாளர் பெண்கள்.
– கவின்.
The post மாஸ் காட்டிய ஜல்லிக்கட்டுப் பெண்கள்! appeared first on Dinakaran.