சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்!

7 hours ago 3

தென்னையில் பல்வேறு பூச்சிகள் காணப்பட்டாலும் காண்டாமிருக வண்டு, கருந்தலைப்புழு மற்றும் ஈரியோ பையிட் சிலந்தி ஆகியவை மட்டுமே தமிழகமெங்கும் மிகுந்த அளவில் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், தற்போது ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, அலிரோடைக்கஸ் ருஜியோபெர்குளேடஸ் எனும் புதிய சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்னையில் பெரிய அளவில் தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றன. 2016ம் ஆண்டில் பொள்ளாச்சி பகுதியில் இந்த புதிய வகை பூச்சிகளின் தாக்குதல் தென்னையில் கண்டறியப்பட்டது. மேலும் இதன் தாக்குதல் வாழை, சப்போட்டா, பாமாயில், மாமரம், முந்திரி, மக்காச்சோளம் மற்றும் பல்வேறு வகையான அலங்கார பனைச்செடிகளில் அதிகப்படியாக காணப்படுகிறது. இந்தப் பூச்சிகளின் தாக்குதல் தற்போது தமிழகத்தில் தென்னை மரங்கள் வளரும் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இச்சுருள் வெள்ளை ஈயின் பாதிப்பு மற்றும் அதன் மேலாண்மை முறைகளை தென்னை விவசாயிகள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்து, அதன் வெளிப்பாடாக கீழ்வரும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை உழவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

* தென்னங்கீற்றுகளில் அடிபரப்பை நோக்கி தண்ணீரை இயந்திரத் தெளிப்பான்கள் உதவியுடன் வேகமாக தெளிக்க வேண்டும்.
* மஞ்சள் நிற பாலித்தின் தாள்களில், இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 20 என்ற அளவில் தென்னை மரத்தில், 6 அடி உயரத்தில் தொங்க விட்டோ அல்லது தண்டுப்பகுதியில் சுற்றியோ வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
* என்கார்சியா ஒட்டுண்ணிகளை தோப்புக்கு 100 என்ற அளவில் விடுவதால், வெள்ளை ஈக்களைப் படிப்படியாக குறைக்கலாம்.
* அப்பர்ட்டோகிரைசா இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 400 என்ற விகிதத்தில் கீற்றுகளில் இணைத்து வெள்ளை ஈக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
* மேலும் ஒட்டுண்ணிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, தென்னை மரங்களுக்கு இடையே வாழை, கல்வாழை, சீதா ஆகிய பயிர்களை ஊடுபயிராக நடலாம்.
* தாக்குதல் அதிகரிக்கும் போது 5 சதவீதம் வேப்பெண்ணெயுடன் ஒட்டு திரவம் கலந்து கீற்றுகளின் அடியில் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
* வெள்ளை ஈக்களின் சேதத்தால் ஏற்படும் கரும்பூசனத்தை நீக்க 25 கிராம் மைதாமாவுப் பசையை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
* பரிந்துரைக்கப்பட்ட உரங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.
* எல்லாவற்றிற்கும் மேலாக பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
*அதிக அளவு பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது நன்மை செய்யும் இயற்கை எதிரிகள் அழிந்து விடுவதால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து நன்மை செய்யும் பூச்சிகளை வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்த வேண்டும் (இயற்கை எதிரிப்பூச்சிகளான பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சிகள், பொறி வண்டுகள், ஒட்டுண்ணிக் குளவிகள் முதலியவற்றை பாதுகாக்க வேண்டும்).

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்விளக்கங்கள் தமிழகம் எங்கும் உள்ள தென்னை உழவர்களுக்கு சென்று சேரும் வண்ணம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்பு இயக்ககம், தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு மற்றும் ஆனைமலை வட்டாரங்களில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு உழவர்களுக்கு மேலாண்மை பயிற்சியும், விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம், ஆனை மலை வட்டம், சோமந்துறை கிராம விவசாயிகளுக்கான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்னங்கீற்றுகளின் அடிப்பரப்பை நோக்கி தண்ணீரை இயந்திரத் தெளிப்பான்கள் உதவியுடன் வேகமாக தெளித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆத்துப்பொள்ளாச்சி கிராம விவசாயிகளுக்கான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் என்கார்சியா ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 100 என்ற அளவில் வெளியிட்டு வெள்ளை ஈக்களை படிப்படியாக குறைப்பது பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் இரண்டு புறமும் விளக்கெண்ணெய் தடவி ஏக்கருக்கு 20 என்ற அளவில் தென்னை மரங்களில் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களைக் கவர்ந்தழிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. 

The post சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article