பொன்னேரி, மே 24: சோழவரம் ஒன்றியம் விச்சூர், வெள்ளிவாயல் ஊராட்சிகளில் ரேஷன் கடை மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி எம்பி சசிகாந்த் செந்திலிடம் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட, சோழவரம் ஒன்றியம் விச்சூர் வெள்ளிவாயல் ஊராட்சிகளை சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் சகிலா சகாதேவன், நேற்று முன்தினம் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்திலை நேரில் சந்தித்து, ரேஷன் கடை மற்றும் பஸ் வசதி ஏற்படுத்தக்கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: விச்சூர், வெள்ளி வாயல் ஊராட்சிகளில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் பயணித்து பொன்னேரி நெடுஞ்சாலை குழந்தை இயேசு கோயில் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, திருவொற்றியூர் பேருந்து பணிமனையில் இருந்து மணலி புதுநகர், குழந்தை இயேசு கோயில் வழியாக வெள்ளிவாயல் வரை பேருந்து சேவை தொடங்க வேண்டும். மேலும், விச்சூர் கிராமத்தில் 740 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி ரேஷன் கடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, அதனை அகற்றிவிட்டு புதிய ரேஷன் கடை கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதில், நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post சோழவரம் ஒன்றியம் விச்சூர், வெள்ளிவாயல் ஊராட்சிகளில் ரேஷன் கடை, பேருந்து வசதி கேட்டு எம்பியிடம் மனு appeared first on Dinakaran.