
சென்னை,
இது தொடர்பாக அந்த கட்சியின் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க-வின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறை மந்திரியைப் போலவே விளையாட்டுத்தனமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு, உச்சநீதிமன்றம் டாஸ்மாக் வழக்கிற்கு அளித்த இடைக்காலத் தடையில், தேவையில்லாமல் எங்களுடைய அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டு, தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இன்று தி.மு.க அரசின் ஊழல்கள் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அருவருக்கத்தக்க அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளார். . இதே சென்னை ஐகோட்டு, மத்திய அமலாக்கத் துறை `தி.மு.க.வினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளை விசாரிக்கலாம்' என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன் அப்போது எங்கே போனார்?
முன்னாள் டாஸ்மாக் மந்திரி செந்தில் பாலாஜி வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, பல பாலியல் குற்ற வழக்குகள், போதைப் பொருள் நடமாட்ட வழக்குகள் போன்ற பல வழக்குகளில் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தி.மு.க. அரசுக்கு குட்டு வைத்ததை வசதியாக மறந்துவிட்டாரா? தயாநிதி மாறன். தற்போது இந்த ஒரு வழக்கின் இடைக்காலத் தடைக்கு வாயை திறந்துள்ள தயாநிதி மாறன், மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்? இப்போது வாய் பேசுவது விந்தையிலும் விந்தை.
சுப்ரீம் கோர்ட்டு, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது அமலாக்கத் துறை பதில் அளிக்கும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும். தி.மு.க. அரசு, டாஸ்மாக் விஷயத்தில் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.