கடந்த 2-3 மாதங்களாக எடுத்த கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது - சமீர் ரிஸ்வி

4 hours ago 3

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த சமீர் ரிஸ்வி 58 ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆட்ட நாயகன் சமீர் ரிஸ்வி அளித்த பேட்டியில், "இது மிகவும் நன்றாக இருக்கிறது. கடந்த 2-3 மாதங்களாக நான் எடுத்த கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இப்படி விளையாட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு முன்பு இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு இன்னிங்சுக்கு பிறகு அந்த நம்பிக்கை வந்தது. இப்போது என்னால் செய்ய முடியும் என்று உணர்கிறேன். நான் உள்ளே சென்றபோது, 100 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது. முதல் 3-4 பந்துகளை பார்த்துவிட்டு எனது ஷாட்களை விளையாடினேன்" என்று கூறினார். 

Read Entire Article