கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை

5 hours ago 2

சென்னை,

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாகவும், அந்த வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பருவமழை முந்தியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.

மேலும், தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக ரத்தனகிரி-தாபோலுக்கு இடையே கரையை கடந்தது. இதுதவிர மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரணங்களினால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

தென்மேற்கு பருவமழை தொடங்கும் இந்த நேரத்திலும், அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாலும் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், இயல்பையொட்டியே மழை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் (தற்போது வரை) தமிழ்நாட்டில் 11 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இதுவரை இயல்பைவிட 92 சதவீதம் அதிகமாக, அதாவது 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read Entire Article