
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வானகரம், பரனூர், செங்கல்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே அளவிற்கு அதிகமாகவும், காலாவதியான நிலையிலும், செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அதற்கு மாறாக தொடர்ந்து சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தோடு, கூடுதலாக ரூ.5 முதல் ரூ.75 வரை வசூலிக்கும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து சாமானிய மக்கள் மென்மேலும் சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாக கூடும்.
எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வணிகர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, காலாவதியான நிலையில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.