
சென்னை,
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் 'சிவ மனசுல சக்தி'. இத்திரைப்படத்தில் அனுயா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஆர்யா சிறப்புத்தோற்றதில் நடித்தார். இது இயக்குனர் ராஜேசின் முதல் திரைப்படமாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்க்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2009-ல் வெளியான இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றும் பேசப்படுகின்றன. ஜீவாவிற்கு தாயாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து 2010-ல் ஆர்யா- சந்தானத்தை வைத்து 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தை அதே பாணியில் எடுத்து ஹிட் படமாக கொடுத்தார் இயக்குனர் ராஜேஷ். 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து 'பிரதர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இயக்குனர் ராஜேஷ் 'சிவ மனசுல சக்தி 2' படத்தின் அப்டேட் குறித்த தகவலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.