சிவபெருமானின் பேரொளி வடிவமே லிங்கோத்பவமூர்த்தி

8 hours ago 2

மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவிற்கும் நம்மில் யார் இந்த உருவின் அடிமுடி அறிய வல்லாமோ அவர்களே பெரியவர் எனச் சபதங்கொண்டு மகாவிஷ்ணு பன்றியாகவும், பிரம்மன் கழுகாகவும் வடிவெடுத்து அடியும் முடியும் தேடினர். பல காலம் தேடியும் கண்டறிய முடியாமல் திகைத்திருக்கையில் ‘ஓம்’ மென்னும் பிரணவ ஒலி கேட்க ஐந்து திருமுகங்களுடன் அந்த இலிங்கத்திடை காட்சி தந்து முத்தொழிலுக்கும் மூல காரணன் நாமென அதில் லயித்த திருவுருவம். கூறியது. அத்திரு அருவமே லிங்கோத்பவர் ஆவார். இக்கதை வாமன புராணத்திலும், சிவ மகாபுராணத்தின் முதல் அத்தியாத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

– என்று இலிங்கோத்பவர் உற்பத்தியைப் பற்றி விவரித்துக் கூறுகிறது பழம் பெரும் நூலான அபிதான சிந்தாமணி!

எந்த விதமான ஆசா பாசங்களுக்கும், தீமைகளுக்கும் உலகியலுக்கும் இடம் இன்றி முற்றிலும் பக்தி சிரத்தை, பூஜை, விரதம், தியானம், கடவுள் துதி என மிகத் தூய்மையுடன் கொண்டாடப்படும் திருநாள் மகாசிவராத்திரி.

அருட்பெருஞ்ஜோதி சிவமான அடிமுடியில்லாத லிங்கப் பரம்பொருளுக்கு உரிய திருவிழா கார்த்திகை தீபம். லிங்கத்திலிருந்து அடியும் முடியும் மறைந்துள்ள வண்ணம் வெளிப்பட்டு அருளி பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் திருக்காட்சி தந்த பரஞ்ஜோதிப் பெருமானாகிய லிங்கோத்பவருக்கு உரிய திருவிழா மகாசிவராத்திரி!

‘‘பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்
பிரமம் யாம் பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவு இஹனஅ௸உ
பரம் ஆகி நின்றவா!’’
– என்று திருவாகமும்.

‘‘அயன் திருமால் போற்றி உனைக் காணாது
நாதனே இவன் என்று நயந்து ஏத்த
தழல் தூண் அதன் நடுவே ஒரு உருவம்
விளம்பட்டு அருள் செய்தான்.’’

என்று திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலும் லிங்கோத்பவரை பரம்பொருள் ஒன்றே என எடுத்துக் காட்டுகின்றன.தங்களுக்கு மேலே எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று தான் என்று உணர்ந்த அரியும் அயனும் பக்தியுடன் போற்றித் தொழுத போது, பரமேஸ்வன் தழல் தூண் நடுவிலிருந்து திருமுடியும் திருவடியும் மறைந்திருக்குமாறு மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி அன்று அரி அயனுக்குத் திருக்காட்சி தந்தார். அரிஅயனுக்குப் பரம்பொருள் இலிங்கோத்பவர் வடிவில் காட்சித் தந்த நாளே மகாசிவராத்திரித் திருநாள்:

‘‘மால் அறியா நான்முகனும் காணா மலை
ஈறிலாக் கொழுஞ் சுடர்க் குன்றே!’’

என்று மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் குறித்தது போல், பெருமான் நெருப்புத் தூணாக நின்றதும், பிரம்மா விஷ்ணு பூஜை செய்து வணங்கியதுமான திருத்தலம் அருணகிரி எனும் திருவண்ணாமலையாகும் சிவாலயங்களில் இலிங்கோத்பவர்.

சிவபெருமான் அருளாட்சி புரியும் திருக்கோயில்களில் கருவறைச் சுவற்றின் பின் புறம் செழுஞ்சுடர் மூர்த்தியாகிய ‘இலிங்கோத்பவர்’ எழுந்தருளியுள்ளார்.திருவாதவூர், திருமழபாடி முதலிய திருத்தலங்களில் லிங்கோத்பவர் நான்கு மண்டபத்தில் உள்ளார். லிங்கோத்பவரின் திருவுருவம் இரண்டு வகையில் அமைந்துள்ளது. லிங்கத்தின் மேல் அன்னப் பறவையும், கீழே பன்றியும் இருக்க லிங்கோத்பவர் காட்சி தருவது ஒருவகை. இது பிற்கால அமைப்பு. மற்றொரு வகையில் வலது புறம் பிரம்ம தேவனும் இடது புறம் மகாவிஷ்ணுவும் கை கூப்பித்தொழுது வணங்கித் துதித்து நிற்க, அவர்களுக்கு லிங்கோத்பவர் காட்சி தருகின்றார். இது பழங்கால அமைப்பு. மற்றும் இது புராண வரலாற்று நிகழ்ச்சிக்குப் பொருத்தமான அமைப்பும் ஆகும்.

இத்தகைய அமைப்பினை விடங்கத் தலங்களான திருவாரூர் தியாகராசர் திருக்கோயில், நாகை காரோண திருக்கோயில், திருக்கோளிலி எனும் திருக்குவளை கோளிலியப்பர் திருக்கோயில் ஆகியவற்றிலும் அட்டவீரட்டத் தலங்களான திருவழுவூர், திருப்பறியலூர் ஆகியவற்றிலும், திருவாவடுதுறை, தென் குரங்காகுதுரை, குத்தாலம் எனும் திருத்துருத்தி, தாராசுரம், திருக்கலயநல்லூர், மருதாந்த நல்லூர் எனும் திருக்கருக்குடி, திருக்கடுவாய்க்கரைப் புத்தூர், திருப்பூவனூர், திருநல்லம் எனும் கோனேரி ராசபுரம், திருக்கொண்டீசுரம், இராமனாதீசுரம், மீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர் வில்வ வனநாதர் திருக்கோயில் போன்ற சிவாலயங்களில் கண்டு களிக்கலாம்.

சத்தியகிரீஸ்வரர் குகைக் கோயிலில் லிங்கப் பரம்பொருளுக்கு நேரே எதிரில் கூரையை முட்டும் அளவிற்கு மிகப் பெரிய இலிங்கோற்பவர் இரண்டு கரங்களுடன் அற்புத வடிவில் காட்சி தருகின்றார். மகாவிஷ்ணுவும் பிரம்ம தேவரும் இலிங்கோற்பவர் வடிவழகை மீண்டும் காண விரும்பியதால் அவர்களுக்கு சிவபெருமான் இலிங்கோற்பவராக திருக்காட்சி அளித்த திருத்தலம் திருமயம் என்கிறது தல வரலாறு.

திருவையாறுக்கு அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயிலும் மதுரை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் இலிங்கோற்பவருக்குத் தனிச் சந்திரி உள்ளது.காஞ்சிபுரத்தில் கைலாயநாதர் ஆலயத்தில். எட்டுத் தோள்களுடன் கூடிய லிங்கோற்பவரைக் காணலாம். இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயத்தில் மானும் மழுவும் இடம் மாறி அமைந்திருக்கும் லிங்கோற்பவமூர்த்தியைக் கண்டு தரிசிக்கலாம்.சுசீந்திரம் தாணுமாலாயன் திருக்கோயிலில் முழுமையான லிங்கோத்பவர் திருமேனி உள்ளது. இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரில் உள்ள  பால்வண்ண நாதர் ஆலயத்தில் பஞ்சலோகத்திலான லிங்கோற்பவ மூர்த்தம் உள்ளது. அருப்புக் கோட்டை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் லிங்கோற்பவ வடிவம் எழுந்தருளியிருப்பதாக ஒரு கல்வெட்டு உள்ளது.ஆந்திரா மாநிலம், நளகொண்டாவட்டம் பனகல்  சோமேஸ்வரர் ஆலயத்தில், சிவலிங்கத் திருவடிவை பிரம்மனும் விஷ்ணுவும் வழிபடுவது போன்ற எழிலான திருக்கோலத்தைக் காணலாம். திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரத் திருப்பதிகங்களில் ஒன்பதாம் பாடல்கள் அனைத்தும் லிங்கோற்பவர் துதியாக உள்ளன.

‘கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை என்ற திருவாசகத்தைப் பின்பற்றி இராமலிங்க அடிகள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என்று பாடிப் போற்றினார் லிங்கோற்பவ மூர்த்தியை!பிரம்மா, விஷ்ணுவுக்கு சிவஞானம் அருளி லிங்கோற்பவர் காட்சி கொடுத்த நாள் புதன்கிழமை. ஆதலால், புதன் கிழமையன்று லிங்கோற்பவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.மகா சிவராத்திரியின்போது லிங்கோற்பவ மூர்த்தியை மூன்றாவது காலத்தில் வழிபட வேண்டும் என்பதும் இதனை ‘‘லிங்கோற்பவ காலம்’’ என்றும் கூறுவர்.

இந்த வேளையில் லிங்கோற்பவ மூர்த்திக்கு சுத்தமான பசு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்வித்து, கம்பளி ஆடை அணிவித்து, எள் அன்னம் நிவேதித்து வழிபட வேண்டும் என்றும், சிவபூஜை விதியின்படி தேன் மற்றும் கஸ்தூரி சந்தன அபிஷேகம் செய்ய வேண்டும். வெண்ணிற ஆடை, மாணிக்க ஆபரணம், செங்கழுநீர் மலர் மாலை அணிவிக்க வேண்டும் என்றும் சில விதிமுறைகளுண்டு. இறுதியாக எள் அன்னம் நிவேதனம் செய்து பஞ்சமுக தீபத்துடன் சாம வேதம் ஓதி ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

லிங்கோற்பவே மூர்த்தியைத் தொடர்ந்து வழிபட்டால் அனைத்துப் பாவங்களும் நீங்கும். தீமைகள் விலகியோடும். நீண்ட ஆயுளையும், பெரும் புண்ணியத்தையும், மறுமையில் பேரின்பத்தையும் பெற்றுய்யலாம். ‘இதனால் தான் இவரது அருட்சக்தியை வேதங்கள்’ மோட்சப் பிரதாயி நீ’ என்று போற்றுகின்றன!

ஆர்.சந்திரிகா

The post சிவபெருமானின் பேரொளி வடிவமே லிங்கோத்பவமூர்த்தி appeared first on Dinakaran.

Read Entire Article