சிவகிரி ஜிஹெச்சில் ஆயுதங்களுடன் புகுந்து ரகளை தூய்மை பணியாளரை தாக்கிய தொழிலாளி கைது

1 week ago 5

சிவகிரி: சிவகிரி அரசு மருத்துவமனைக்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்டு மனைவியை மிரட்டியதோடு தூய்மைப் பணியாளரைத் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், சிவகிரி பஜனைமடம் தெருவைச் சேர்ந்த பூமாரி மகன் ரமேஷ் (எ) துக்காண்டி (30. தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவி மருதவள்ளி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் (எ) துக்காண்டி தாக்கியதில் காயமடைந்த மருதவள்ளி சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருதவள்ளியை பார்க்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு சென்ற ரமேஷ் (எ) துக்காண்டி, தகராறு மற்றும் ரகளையில் ஈடுபட்டதோடு அங்கு மருதவள்ளியுடன் இருந்துவந்த அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேற முயன்றாராம். இதை மருதவள்ளியின் உறவினர்கள் கண்டித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அரிவாள் மற்றும் வாளை எடுத்துக்கொண்டு வந்து அங்கிருந்தவர்களை தாக்க முயன்றாராம். அப்போது இதைப் பார்த்த அங்கு தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் மேலக்கரிசல்குளம், இந்திரா நகரைச் சேர்ந்த சின்னராஜின் மனைவி முருகானந்தவள்ளி என்பவர் மருத்துவமனையின் கதவை அடைத்தாராம். ஆனால் மேலும் ஆவேசமடைந்த ரமேஷ், வார்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதோடு முருகானந்த வள்ளியையும் தாக்கினார்.

அத்துடன் மருத்துவமனையின் கதவை அரிவாளால் வெட்டி கண்ணாடி மற்றும் சேர்களை சேதப்படுத்தியதோடு மனைவிக்கும் மிரட்டல் விடுத்துச் சென்றாராம். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிவகிரி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், அரிவாளால் வெட்டிய ரமேசை கைதுசெய்தனர்.

மேலும் ரமேஷிடம் இருந்து பைக் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ரமேசை ஆஜர்படுத்திய போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சிவகிரி ஜிஹெச்சில் ஆயுதங்களுடன் புகுந்து ரகளை தூய்மை பணியாளரை தாக்கிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article