திருச்செங்கோடு அருகே ரூ.2 கோடியில் தரமற்ற இடத்தில் அமைக்கப்படும் தகன மேடை

3 hours ago 1

*வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே ரூ.2 கோடியில் தரமற்ற இடத்தில் அமைக்கப்படும் எரிவாயு தகன மேடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு தாலுகா, மொளசி ஊராட்சி முனியப்பன்பாளையம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். காவிரி கரையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், சில மாதங்களுக்கு முன்பு, ரூ.2 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி தொடங்கியது.

அப்போதே மண் பரிசோதனை செய்து, இங்கு கட்டிடம் கட்ட தகுதியாக உள்ளதா என ஆராய்ந்து கட்டிடம் கட்ட வேண்டும். அதுவரை பணியை தொடங்க வேண்டாம் என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த மார்ச் மாதம், கலெக்டரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது.

ஆனாலும், மண் பரிசோதனை செய்யாமல் சாதாரணமாக குழி தோண் டினாலே, 5அடியில் தண்ணீர் வரும் இடத்தில், அஸ்திவாரம் போட்டு கட்டிட பணியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: எரிவாயு தகன மேடை அமைக்கும் பகுதி, ஏற்கனவே மண் கொட்டி மேம்படுத்தப்பட்ட பகுதி. இங்கு மண் பரிசோதனை, மண் வளமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து தான் கட்டிடம் கட்ட வேண்டும்.

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, கடந்த இரண்டு மாதங்களாக இப்பணி நடந்து வருகிறது. ஆற்றங்கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் தான், எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என்ற அரசு விதி இருந்தும், 25 மீட்டர் தொலைவில் உள்ள இந்த பகுதியில் அமைக்கும் இந்த கட்டுமான பணி எவ்வளவு வலுவாக இருக்கும் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post திருச்செங்கோடு அருகே ரூ.2 கோடியில் தரமற்ற இடத்தில் அமைக்கப்படும் தகன மேடை appeared first on Dinakaran.

Read Entire Article