*புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
புதுச்சேரி : ஆள்மாறாட்டம் செய்து ரூ.5.10 கோடி நூதன மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கமிஷனுக்காக வங்கி கணக்கை மோசடி நபர்களுக்கு கொடுத்ததால் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.
புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கணக்காளருக்கு கடந்த மார்ச் மாதம் நிறுவன உரிமையாளர் போல் அவரது வாட்ஸ்-அப் புகைப்படத்துடன் தகவல் வந்துள்ளது.
அதில், அவசரக் கூட்டத்தில் இருப்பதாகவும், புதிய நிறுவனத்தை வாங்குவதற்காக பணத்தை பரிமாற்றம் செய்யவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி கணக்காளரும் பணத்தை 2 தவணைகளாக ரூ.5.10 கோடியை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நிறுவன உரிமையாளர், கம்பெனி வளாகத்தில் இருந்தபோதும், இதேபோல் பணம் அனுப்புமாறு அவரது பெயரில் குறுந்தகவல் வந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த கணக்காளர் இதுபற்றி உரிமையாளரிடம் கேட்டபோது, ஏற்கனவே வந்த வாட்ஸ்-அப் செய்தி போலி என்பதும், அதனால் ரூ.5.10 கோடியை அனுப்ப வைத்து.
மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் ஏற்கனவே மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.80 கோடி கைப்பற்றப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையின்பேரில், கர்நாடகாவை சேர்ந்த ஓம்கார்நாத், தெலங்கானாவை சேர்ந்த ராகவேந்திரா, ஆந்திராவை சேர்ந்த சசிதர்நாயக், பவாஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் ரூ.1.04 கோடி வங்கியில் இருந்து மீட்கப்பட்டது. இதுவரை மொத்தம் ரூ.2.48 கோடி மீட்கப்பட்டுள்ளது.
சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவின்பேரில் சைபர் கிரைம் எஸ்பி பாஸ்கரன் வழிகாட்டுதலின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேலும் சிலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை வாங்கிக் கொடுத்த கோவைபுதூரை சேர்ந்த ரவி கிருஷ்ணாராவ் (50) என்பவரை கோயம்புத்தூரிலும், திருச்சியை சேர்ந்த குமரேசன் (26) என்பவரை ஊட்டியிலும் சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
பரிமாற்றம் நடைபெறும் தொகையில் 5 சதவீத கமிஷன் கொடுக்கிறோம் என்று கூறி, வங்கிக் கணக்குகளை வாங்கி, அதை இணையவழி மோசடிக்காரர்களுக்கு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 2 பேரையும் நேற்று புதுச்சேரி அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சில வெளிநாட்டு நபர்களின் தொடர்பு இருப்பதால் அது சம்பந்தமாக விசாரித்து அவர்களின் தகவல்களை திரட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி அஜித்குமார் சிங்ளா தெரிவித்துள்ளார்.
`கமிஷனுக்காக வங்கி கணக்கை கொடுத்தால் கைது’
இதுபற்றி ஐஜி அஜித்குமார் சிங்ளா கூறும்போது, இணைய வழி மோசடிக்காரர்களுக்கு வங்கி கணக்குகளை மற்றவர்களுக்கு வாங்கி கொடுத்து உதவியதால் மட்டும் இந்த வருடத்தில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் கமிஷனுக்காக வங்கி கணக்கு/ தொலைபேசி எண் ஆகியவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம்.
இணைய வழி மோசடிக்காரர்கள் தாங்கள் கொள்ளையடிக்கின்ற பணத்தை இந்திய வங்கி கணக்குகளை வாங்கி, அதில் மோசடி செய்த பணத்தை அனுப்பி எடுக்கின்றனர். ஒரு சதவீத, 2 சதவீத கமிஷன்களுக்கு ஆசைப்பட்டு, வங்கிக் கணக்குகளை கொடுத்து உதவ வேண்டாம். உங்கள் வங்கி கணக்குக்கு மோசடி செய்து வருகின்ற பணத்திற்கு நீங்களே பொறுப்பு.
எனவே, வங்கி கணக்கை யாருக்கும் கொடுக்க வேண்டாம். கொடுத்து உதவுகின்ற நபர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். மேலும், சைபர் குற்றம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலும், ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்தாலும் உடனடியாக சைபர் குற்றத்திற்கான கட்டணமில்லா எண் 1930, இணையதளம்: cybercrime.gov.in, லேண்ட்லைன்: 04132276144/ 9489205246 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
The post ரூ.5 கோடி ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் மேலும் 2 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.