சென்னை: சிவகங்கை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 6 பேரும், குளத்தில் மூழ்கி ஒருவரும் இறந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே சிராவயலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதனை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். 250 மாடுகள் களமிறக்கப்பட்டன. 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் காளை முட்டியதில் பார்வையாளரான தேவகோட்டை அருகே பெரியஉஞ்சனையைச் சேர்ந்த சுப்பையா (45) பலியானார். மேலும், திருப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் என்.எம்.சாக்ளா, திருப்புத்தூர் டிஎஸ்பி அலுவலக சிறப்பு எஸ்ஐ விஜய ரகுநாதன் (56) உட்பட 130 பேர் காயமடைந்தனர். திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை கீழ ஆவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தைனீஸ் ராஜன் (42). இவர் வளர்த்த காளையை நேற்று சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டிற்காக அழைத்து வந்துள்ளார். அப்போது கம்பனூர் கண்மாயில் காளை இறங்கியது, அதை பிடிக்க கண்மாய்க்குள் இறங்கிய தைனீஸ் ராஜன் தாமரை செடிகளுக்குள் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல காளையும் உயிரிழந்தது.
கரூர்: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் நடந்த ஜல்லிக்கட்டில் 734 காளைகள் பங்கேற்றன. 380 வீரர்கள் களம் இறங்கினர். 22 காளைகளை அடக்கிய நாமக்கல் எருமைபட்டியை சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக பைக்கையும், வாடிவாசலில் சுற்றி விளையாடி வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற மதுரை மாவட்டம் செக்காயூரணி கதிரவனின் மாடு, சிறந்த ஜல்லிகட்டு காளையாக தேர்வு செய்யப்பட்டு சொகுசு காரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். காளைகள் முட்டியதில் 16 வீரர்கள், 47 பார்வையாளர்கள் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதில் பார்வையாளர் திருச்சி குழுமணி அருகே சமுத்திரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் குழந்தைவேல் (67) உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் 750 காளைகளும், வீரர்கள் 300 பேரும் களம் கண்டனர். இதில் 19 பேர் காயமடைந்தனர். மங்கதேவன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். இதில் பார்வையாளரான கீரனூர் அருகே ஒடுகம்பட்டி விளாவயல் பகுதியை சேர்ந்த பெருமாள் (70) உயிரிழந்தார்.
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பெரியகலையம்புத்தூர் கிராமத்தில ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் கமிட்டி சார்பில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 500 காளைகள் வரை அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருவீடு எஸ்ஐ கணேசன், பெண் போலீஸ் பாக்கியலட்சுமி, மாடுபிடி வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த அருண்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சேலம்: சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, அப்பகுதியை சேர்ந்த முன்னாள் தேமுதிக கவுன்சிலரின் கணவர் மணிவேல்(45) சென்றிருந்தார். சீறிப்பாய்ந்து வந்த காளை ஒன்று, மணிவேலை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சி அருகே, சேனைகவுண்டனூர் காட்டுவளவை சேர்ந்தவர் வேடியப்பன் (34), கூலி தொழிலாளி. இவர் தாத்தையங்கார்பட்டி கிராமத்தில் செம்பு மாரியம்மன் கோயிலுக்கு நேற்று சென்றுள்ளார். இந்த கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதாட்ட நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஒரு காளையை கோயிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேடியப்பன் காளையின் கொம்பை பிடித்து அழுத்தியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த காளை, வேடியப்பனை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில், அவர் பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளியில் நேற்று காலை 11 மணிக்கு, எருது விடும் திருவிழா நடந்தது. அப்போது, களத்தில் ஓட விடப்பட்ட ஒரு காளையை, காளிங்காவரம் அடுத்த தொட்டேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திருமலேஷ்(30) என்பவர் துரத்தினார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு காளை முட்டியதில், திருமலேஷ் இறந்தார்.
The post சிவகங்கை, கரூர், புதுகை, சேலம், கிருஷ்ணகிரில் நடந்த மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டில் பார்வையாளர் உட்பட 7பேர் பலி: குளத்தில் மூழ்கி காளை உயிரிழப்பு appeared first on Dinakaran.