மும்பை,
மும்பையை அடுத்த நவிமும்பை தலோஜா ஜெயிலில் அனில் அசராம் ஜாதவ் (வயது38) என்ற போலீஸ்காரர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு பணிக்கு வந்தார். ஜெயிலுக்குள் சென்றபோது அவரது உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் டிபன் பாக்சில் மறைத்து போதைப்பொருளை ஜெயிலுக்குள் கடத்த முயன்றது தெரியவந்தது.
டிபன் பாக்சில் வைத்திருந்த கஞ்சா, சரஸ், எம்.டி.எம்.ஏ. என ரூ. லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீஸ்காரர் மீது கார்கர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் அனில் அசராம் ஜாதவை கைது செய்தனர். அவர் கைதிகளுக்கு கொடுக்க ஜெயிலுக்குள் போதைப்பொருளை கடத்தி செல்ல முயற்சி செய்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.