சிறைக்கு செல்லவும் தயார்... வேலையிழந்த ஆசிரியர்களை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேச்சு

5 hours ago 2

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில், அரசால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என 25,753 பேர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால், பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களை தேர்ந்தெடுத்த விதத்தில் முறைகேடு நடந்துள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கொல்கத்தா ஐகோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா நகரில் நடந்த கூட்டத்தில், வேலையிழப்பால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்கள் ஒன்று கூடினர்.

அவர்களை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுடைய கண்ணியம் காக்கப்பட எல்லாவற்றையும் நான் செய்வேன் என கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அரசு கட்டுப்படுகிறது. ஆனால், கவனத்துடனும் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டும் நிலைமை கையாளப்பட்டு உள்ளது என உறுதி செய்யப்படுவதற்கான தொடக்க நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தகுதியுள்ள நபர்கள் பள்ளியில் இருந்து வேலையை இழப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.

வேலையிழந்த அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் எனக்கு தண்டனை வழங்க யாரேனும் விரும்பினால், சிறைக்கு செல்லவும் நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியின் பேச்சை கேட்பதற்காக, நுழைவுக்கான முறையான அனுமதி இல்லாத நபர்களும் குவிந்தனர். இதனால், பாதுகாப்பில் சவாலான சூழல் ஏற்பட்டது. கூட்ட நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Read Entire Article