
சென்னை,
பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
இந்த சூழலில் ராமேசுவரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமர்ந்திருந்த மேடையில் நயினார் நாகேந்திரனுக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேடைக்கு கீழே அமர்ந்திருந்தார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடைசி நேரத்தில் வந்த உத்தரவால் நயினார் நாகேந்திரனுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பிரதமர் நிகழ்வுகளில் மேடையில் அமரும் பாஜக தலைவர் அண்ணாமலை மேடையில் இல்லாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "நடந்தது அரசு நிகழ்வு என்பதால் மேடைக்கு பின்புறம் இருந்தேன். கோவிலில் சாமி தரிசனம் செய்தேன். அரசு நிகழ்வுகளில் நான் மேடை ஏற முடியாது. அதனால் தான் மக்கள் பிரதிநிதிகளாக, எங்கள் கட்சியின் சார்பில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்" என்று கூறினார்.
பா.ஜ.க. புதிய தலைவர் போட்டியில் நயினார் நாகேந்திரன் பெயர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு கட்சியினரிடையே சலசலப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர், நாளை உள்துறைமந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் பா.ஜ.க. மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி வர உள்ளநிலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.