சிறுவர்களுக்கு டைப்-2 நீரிழிவு அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மருத்துவர் விளக்கம்

3 hours ago 1

பெரம்பூர்: மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, கலாச்சார மாற்றம் போன்றவற்றால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஒரு காலகட்டத்தில் சத்தான உணவுகளை உண்டு ஆரோக்கியமாக விளையாடி, உடல் உழைப்புடன் வேலைகளை செய்து மனிதன் வாழ்ந்து வந்தான். அப்போது உயர் ரக அடுக்குமாடி மருத்துவமனைகள் மற்றும் தற்போதுள்ள எந்த அதிநவீன மருத்துவ முறைகளும் இல்லை. இருப்பினும் மனிதர்கள் குறைந்தது 60 வயது வரை நோய் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் விஞ்ஞானம் வளர வளர மனிதர்களின் ஆயுட்காலம் சுருங்கி வருகிறது. மேலும் மருத்துவமனைகளின் தேவை மருந்துகளின் தேவை என மருத்துவ உலகம் கொடிக்கட்டி பறக்கும் ஒரு வணிக தேவையாக மாறிவிட்டது. காரணம், தனது வாழ்க்கை முறையை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றி வந்த மனிதர்கள் தற்போது நவீன யுகம் என்ற போர்வையில் தங்களை பல்வேறு விதங்களில் மாற்றிக் கொண்டுள்ளனர். அவற்றின் வெளிபாடு தான் தற்போது மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து, நோய்கள் அதிகரித்துள்ளதற்கான முக்கிய காரணம். ஒரு காலகட்டத்தில் சத்தான உணவுகளை சாப்பிட்டோம். அதுவும் வீடுகளில் சமைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தோம். ஓட்டலில் சாப்பிடுவது, வெளியில் உள்ள கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவது என்பது மிகவும் அரிதாக இருந்தது.

ஆனால் இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் என்றாவது ஒரு நாள் தான் வீடுகளில் சாப்பிடும் சூழல் நிலவுகிறது. அந்த அளவிற்கு ஓட்டல்கள் உணவுகளுக்கு பலர் அடிமையாகி கிடக்கின்றனர். பல வீடுகளில் காலை எழுந்தவுடன் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் வாங்கி குழந்தைக்கு ஊட்டி விட்டு, ஏதாவது ஒரு கலந்த சாதத்தை டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்றனர். மீண்டும் மாலை பள்ளி முடித்து வரும்போது பதப்படுத்தப்பட்ட, பாக்கடெ்டில் அடைக்கப்பட்ட சிற்றுண்டிகளை குழந்தைகளுக்கு தந்து விடுகின்றனர். மீண்டும் இரவு அருகில் உள்ள புரோட்டா கடை பாஸ்புட் போன்றவற்றில் ஏதாவது வாங்கி வந்து குழந்தைகளுக்கு தருகிறார்கள். இதில் எந்தெந்த உணவுகளில் என்னென்ன கலப்படம், ரசாயனம், மசலாக்கள் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. குழந்தைகள் நாவிற்கு சுவையாக உள்ளது என நினைத்து சாப்பிடுகின்றனர்.

அதன் பிறகு படிப்படியாக அவர்களது உடலில் நடக்கும் மாற்றங்கள் பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை அவர்கள் அனுபவிக்கும் போது மட்டுமே தெரிகிறது. அதற்குள் 30 வருடங்கள் ஓடி விடுகிறது இவ்வாறு ஒரு தலைமுறையினரை நோயாளியாக மாற்றிய பெருமைதான் மற்றொரு தலைமுறைக்கு கிடைக்கப் போகிறது. அந்த அளவிற்கு உணவுகளின் தாக்கம் மனிதர்களை கொன்று கொண்டே வருகிறது. மனிதர்கள் 70 வயது வரை நோய் இல்லாமல் வாழ்ந்த காலம் மாறி தற்போது 30 வயதிலேயே பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகி, மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை உணர்ந்து, ஆரோக்கியமான உடல், நல்ல கல்வி இவை இரண்டும் தான் அடுத்த தலைமுறைக்கு நாம் தர வேண்டும்.

ஆனால் இன்று கல்விக்கு முக்கியம் தரும் பெற்றோர்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு கொடுப்பதில்லை. அதனால் தான் தற்போது வரும் ேநாய் பாதிப்புகள் தொடர்பான புள்ளி விவரங்களும் பெற்றோர்களை நிலைகுலைய வைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிபிஎஸ்இ நடத்திய ஒரு ஆய்வில் பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரித்துள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஏராளமான மாணவர்கள் டைப் 2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. பெரியவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த இந்த நோய் பாதிப்பு சமீப காலமாக சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனவே, மாணவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவை கண்காணிக்க முடிவு செய்த சிபிஎஸ்இ அதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்கள் மத்தியில் டைப் 2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் அதிக அளவு சர்க்கரை உணவு எடுத்துக் கொள்வதே இந்த ஆபத்தான நிலைக்கு காரணம். இனிப்பான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதே இதற்கு காரணம். பெரும்பாலும் அதிகப்படியான சர்க்கரை நுகர்வு நீரிழிவு நோயை அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் பருமன், பல் பிரச்னை மற்றும் பிற வளர்ச்சி மாற்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இறுதியில் குழந்தைகளின் நீண்ட கால ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சிபிஎஸ்இ நடத்திய ஆய்வில் 4 வயது முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினசரி கலோரி உட்கொள்ளலில் சர்க்கரை அளவு 13 சதவீதமாகவும், 11 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு 15 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. இது டாக்டர்கள் பரிந்துரைத்த 5 சதவீத வரம்பை கணிசமாக மீறுகிறது.

எனவே அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் இது தொடர்பான விழிப்புணர்வு தகவல் பலகைகள் நிறுவ வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த பலகைகளில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை அளவு, உணவு வகைகளில் உள்ள சர்க்கரை அளவு, அதிக சர்க்கரை நுகர்வுடன் தொடர்புடைய உடல் நல அபாயங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளியில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், இந்த முயற்சிகள் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிப்படியாக நோயாளிகளாக மாறி விடுவார்களோ என்ற அச்சத்தில் தற்போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் பாராட்டப்படக்கூடிய விஷயம் என்றாலும், கல்வி விஷயங்களில் பள்ளிகள் அக்கறை செலுத்தலாம். ஆனால் குழந்தைகளின் ஆரோக்கியம் என்று வரும்போது அதில் கண்டிப்பாக பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த உணவு உடலுக்கு நல்லது, எந்த உணவு உடலுக்கு கெட்டது என்பதை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து ஆரோக்கியமான உணவுகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டும். ஓட்டல்களில் சாப்பிடுவது மற்றும் ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டு வீடுகளில் சத்தான உணவு வகைகளை சமைத்து பழக வேண்டும்.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறையில் கீரை போன்ற உணவு வகைகளை பலரும் வீட்டில் சமைப்பது நிறுத்தி விட்டனர். வாரத்தில் 3 முறையாவது ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தினசரி பாக்கெட் மணி கொடுத்து பள்ளிக்கு அனுப்புகின்றனர். அந்த பணத்தில் மாணவர்கள் பெரும்பாலும் பேக்கரி உணவு வகைகள் மற்றும் வட மாநில உணவு வகைகளை அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனர். இது எந்த வகையிலும் உடலுக்கு நன்மை கிடையாது. எனவே மாணவர்கள் பள்ளியில் இருந்து வரும்போது எந்த வகையான தின்பண்டங்களை வாங்கி அவர்கள் உண்கிறார்கள் என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும்.

அப்படி செய்தால் வருங்கால சந்ததியினர் நோயாளி ஆகாமல் நம்மால் தடுக்க முடியும். இல்லையென்றால் நம் முன்னோர்கள் 60 அல்லது 70 வயதில் பயன்படுத்திய மாத்திரைகளை நமது குழந்தைகள் கண்டிப்பாக 25 அல்லது 30 வயதில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. மாணவர்களிடையே அதிகரிக்கும் சர்க்கரை அளவு குறித்து பெரம்பூரை சேர்ந்த சென் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறியதாவது: உலகத்திலேயே அதிக நீரிழிவு நோய் உள்ளவர்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. சர்க்கரை வியாதி என்பது 2 டைப் கொண்டது. நாம் சாப்பிடும் உணவுகள் சாப்பிட்டு முடித்தவுடன் புரோட்டின் கார்போஹைட்ரேட் கொழுப்பு என 3 விதமாக பிரிகிறது. இதில் கார்போஹைட்ரேட் சர்க்கரையாக மாறுகிறது. இதில் தேவையான அளவிற்கு சர்க்கரையை உடம்பு பயன்படுத்திக் கொள்ளும். அதன் பிறகு இது குளுக்கோசாக மாறும்.

உடலில் சர்க்கரை அளவு, சாப்பாட்டிற்கு முன் 90 முதல் 110 வரையிலும், சாப்பாட்டிற்கு பின் 110 முதல் 140 வரையிலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் சர்க்கரை நமது உடலில் சரியான முறையில் உள்ளது என்று அர்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் நாம் சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை பரிசோதித்து சாப்பிட முடியாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு சில நேரங்களில் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரிக்கும் போது தேவையான குளுக்கோசை வைத்துக் கொண்டு மீதி இருக்கின்ற குளுக்கோசை நமது உடல் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளும்.

நமது தோளுக்கு அருகில் உள்ள கொழுப்புகளில் அது தேங்கிவிடும். மேலும் கல்லீரலில் அது சேமித்துக்கொள்ளும். இவ்வாறு சேமித்து வைப்பது யார் என்று பார்த்தால் அதுதான் இன்சுலின். இன்சுலின் என்பது கணையம் பகுதியில் இருந்து சுரக்கின்றது. இந்த இன்சுலின் ஒழுங்காக சுரக்கவில்லை என்றால் அதைத்தான் டைப் ஒன் சக்கரை வியாதி எனக் கூறுகிறோம். அவ்வாறு நமது உடலில் தேவையான சர்க்கரையை எடுத்துக் கொண்ட பின் தேவையில்லாத சர்க்கரையை கொண்டு சென்று நமது செல்களில் மீது செலுத்தும் போது அவை அதனை உள்வாங்கிக் கொள்ளாமல் இருந்தால் அதனையே டைப் 2 சர்க்கரை வியாதி எனக் கூறுகிறோம்.

டைப் ஒன் சக்கரை வியாதி என்பது நமது முன்னோர்களுக்கு இருந்திருந்தால் நமக்கும் வர அது காரணமாக இருந்து விடுகிறது. மரபணு மூலம் இது அதிகமாக வர வாய்ப்புள்ளது. டைப் 2 எனப்படும் சர்க்கரை வியாதிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள் இவைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிக உடல் பருமன் வைத்துள்ளவர்கள் மற்றும் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் அதிக மன சோர்வோடு உள்ளவர்கள், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் உள்ளவர்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பவர்கள் அதிகமான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் இவர்கள் அனைவருக்கும் ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சுற்றிக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு டைப் 2 சர்க்கரை வியாதி வர அதிக வாய்ப்பு உள்ளது.

அதிக கலோரி உள்ள உணவுகளை தற்போது பலரும் எடுத்துக் கொள்கிறார்கள் சீஸ், மயோனைஸ், பொறித்த உணவுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே, காய்கறிகள், பழ வகைகள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாறிவரும் கலாச்சாரம், உணவு பழக்க வழக்கம் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்ய போகிறோம் என்பதை இதுவரை நமக்கு தெரியவில்லை. ஆனால் மனிதர்கள் இதனை எளிய முறையில் குறைத்து விடலாம். பள்ளிகளில் மாணவர்களிடம் நல்ல ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் பொருட்களை தயாரிக்காதே என்று நாம் கூற முடியாது. ஆனால் நமது பிள்ளைகளை அதை சாப்பிடாதே என்று நாம் கூறலாம். எனவே பெற்றோர்கள் இரண்டாவது முறையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அதிக அளவில் பிஸ்கட் போன்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதில் மைதா சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே தரம் இல்லாத பிஸ்கட் உணவு வகைகளையும் மாணவர்கள் தவிர்க்க வேண்டும். ஒன்று மாணவர்கள் இனிப்பான உணவுகள் வேண்டும் எனக் கூறுகிறார்கள் அல்லது காரமான ஸ்பைசி உணவு வகைகளை தேடுகிறார்கள். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வேண்டும் என்ற வார்த்தையே அவர்கள் வாயிலிருந்து வருவது கிடையாது.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை எந்த உடல் எடையில் உள்ளது. எந்த வயதில் எவ்வளவு உடல் எடை இருக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களது குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை செலுத்த முடியும். பல்வேறு இடங்களில் தற்போது உடல் சார்ந்த விழிப்புணர்வு இருந்தாலும் அதை அமுல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே சிக்கல்களை களைந்து வருங்கால சந்ததியினரை காப்பதற்காக பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நோயில்லாத வாழ்க்கையை தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் தர முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடற்பயிற்சி வகுப்பு
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தினமும் ஒரு உடற்பயிற்சி வகுப்பு பள்ளிகளில் இருந்து வந்தது. அதன் பிறகு வாரத்திற்கு 2 என மாறி தற்போது வாரத்திற்கு ஒன்று என உடற்பயிற்சி வகுப்புகளை வைக்கின்றனர். சாப்பிடும் உணவுகள் அனைத்தும் உடலில் தங்கி விடுகின்றன. இவை பஸ்ட் ஆகி வெளியே சென்றால்தான் கொழுப்புகள் சேராமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல பள்ளிகளில் விளையாடுவதற்கு இடம் இல்லை. அப்படியே இடம் இருந்தாலும் மாணவர்களை விளையாட வைப்பதற்கு ஆசிரியர்களுக்கு மனம் இல்லை என்றே கூறலாம். என்றாவது ஒருநாள் உடற்பயிற்சி வகுப்பு வருகிறது என மாணவர்கள் சந்தோஷப்பட்டாலும் பாடங்களை முடிக்கவில்லை எனக் கூறி அந்த வகுப்பையும் பாடம் எடுக்க பயன்படுத்திக் கொள்கிறார்கள். கல்வி முக்கியம்தான் ஆனால் அதைவிட மாணவர்களின் உடல் நலம் முக்கியம் என்பதை ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு பாட வேலையாவது மாணவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பள்ளிகளில் ஊட்டச்சத்து நிபுணர்
ஒவ்வொரு பள்ளிகளிலும் உடற்பயிற்சி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், மாரல் சயின்ஸ் எனப்படும் வகுப்புகளுக்கு தனியாக ஆசிரியர்கள் உள்ளது போன்று ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஊட்டச்சத்து நிபுணர்களை பள்ளிகள் வேலையில் அமர்த்த வேண்டும். தற்போது மாணவர்களின் உடல் நலம் பல்வேறு விஷயங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது வருங்காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மாணவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது எந்த வகை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் மாணவர்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்தால் அவர்களின் எதிர்காலம் மேம்படும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே பள்ளிகளில் ஊட்டச்சத்து நிபுணர்களை பணியில் அமர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறுகின்றனர்.

மாலை நேர நொறுக்கு தீனி
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் நொறுக்கு தீனி என்பது கட்டாயம் என்ற ரீதியில் இருந்ததில்லை. வீட்டில் உள்ள பயறு வகைகளை எதையாவது சாப்பிடுவோம். இல்லையென்றால் மதிய உணவுக்கு அடுத்தது இரவு உணவு என்று சென்று விடுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாலை நேர நொறுக்கு தீனி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அனைவர் வீடுகளிலும் குழந்தைகள் மாணவர்கள் பள்ளியில் இருந்து வந்தவுடன் ஏதாவது ஒரு பொருளை எடுத்து வைத்து சாப்பிடுகின்றனர். பெரும்பாலும் பிரிட்ஜை திறந்தால் 3 மாதம் அல்லது 6 மாதம் கெடாமல் இருக்கக்கூடிய பாக்கெட்டில் அடைத்துள்ள நொறுக்கு தீனிகள் அதிக அளவில் உள்ளன. அதைத்தான் பெரும்பாலான மாணவர்கள் சாப்பிடுகின்றனர். மேலும் பிஸ்கட் போன்ற உணவு வகைகளையும் சாப்பிடுகின்றனர். பழம், வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்ற உணவு வகைகளை சாப்பிடுவது கிடையாது. இதனால் தினமும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் என்ற ஒரு வளையத்தில் சிக்கி மாணவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.

பள்ளி கேன்டீன்
ஒழுக்கம் என்பது முதலில் நம்மிடம் இருந்து வர வேண்டும். அந்த வகையில் தற்போது மாணவர்களிடையே சர்க்கரை அளவு அதிகரித்துள்ள விஷயம் வெளிவந்தவுடன் பள்ளிகள் தங்களது பள்ளியில் இயங்கும் கேன்டீன்களை சென்று பார்த்தாலே இதற்கான விடை தெரியவரும். அந்த அளவிற்கு பொரித்த உணவுகள் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், கூல்ட்ரிங்ஸ் என உடலுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காத உணவுகளே அந்த கேன்டீனில் விற்கப்படுகின்றன. எந்த ஒரு கேன்டீன்களிலும் சுண்டல், வேர்க்கடலை, பழ சாலட் போன்றவற்றை விற்பது கிடையாது. இதனால் முதலில் மாற்றத்தை பள்ளி கேன்டீன்களில் இருந்து பள்ளி நிர்வாகம் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

The post சிறுவர்களுக்கு டைப்-2 நீரிழிவு அதிகரிப்பதற்கு காரணம் என்ன? மருத்துவர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article