திருமலை: கள்ளக்காதலியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், காகுளம் மாவட்டம் பிடிமண்டசா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (25). இவருக்கும் பாலவலசா கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரியின் கணவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சவுதி அரேபியா நாட்டிற்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது ராஜேஸ்வரிக்கும், அவரது கணவரின் தங்கை கணவரான ராமராவ் (30) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ராஜேஸ்வரியின் எதிர்வீட்டில் வசிப்பவர் ஈஸ்வர்ராவ் (31).
இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இவருக்கு ராஜேஸ்வரி-ராமராவ் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதைக்கூறி மிரட்டி ராஜேஸ்வரியை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார். அவர் மறுத்துள்ளார். இதையறிந்த கள்ளக்காதலன் ராமராவ், கடந்த மே மாதம் 17ம்தேதி இரவு ஈஸ்வர்ராவை தந்திரமாக பேசி பாலவலசாவில் உள்ள முந்திரி தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமராவ், ஈஸ்வர்ராவை பீர்பாட்டிலால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். பின்னர் ராமராவ், ராஜேஸ்வரியை சந்தித்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஸ்வரி தனது தேவைகளுக்கு பணம் வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஈஸ்வரராவின் கொலையை வெளியில் சொல்லி விடுவதாக ராமாராவை அடிக்கடி மிரட்டி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமராவ், ராஜேஸ்வரியையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த மாதம் 11ம்தேதி, பிடாலி அருகே உள்ள முந்திரி தோட்டத்திற்கு பைக்கில் அழைத்துச் சென்றார். அங்கு, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஈஸ்வர்ராவ் கொலை குறித்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமராவ், ராஜேஸ்வரியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றார். ராஜேஸ்வரியை காணாததால், அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 நாட்களுக்கு பிறகு ராஜேஸ்வரியை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் ராமராவ் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் இந்த 2 கொலை சம்பவங்களும் தெரியவந்தது. இதையடுத்து ராமராவை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர்.
The post கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை: கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.