மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கொலை வழக்கில் சரணடைந்த காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் பிரபாகரன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன்(32). தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தார். 2021ம் ஆண்டு காரைக்கால் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன் 2 ஆண்டுகள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். கடந்த 4ம் தேதி மயிலாடுதுறையில் நடந்த தவாக கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் காரைக்கால் சென்ற மணிமாறனை மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அருகே 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல், அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
இதுகுறித்து மணிமாறன் சகோதரர் காளிதாசன் அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தேவமணியின் மகனும், காரைக்கால் மாவட்ட பாமக செயலாளருமான பிரபாகரன்(29), குணசேகரன்(23), வீரமணி(45), டிரைவர் முருகன்(23) ஆகியோர் போலீசில் நேற்று சரணடைந்தனர். செம்பனார்கோவில் போலீசார், 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் மணிமாறன் கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த மணிகண்டன்(36), சரவணன்(33), சகன்ராஜ்(29), கவுண்டன்பாளையம் சரவணன்(28), அஜய்(22), முகிலன்(22), விஜயசங்கர்(30) ஆகியோர் நேற்று வளவனூர் போலீசில் சரணடைந்தனர். அவர்களையும் செம்பனார்கோயில் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து பிரபாகரன் உள்பட 11 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
The post தவாக நிர்வாகி படுகொலை: பாமக நிர்வாகி உள்பட 11 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.