சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த அல்லு அர்ஜுன் தந்தை

4 hours ago 2

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜ் (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு நாள் இரவு முழுவதும் அவர் சிறையில் இருந்தார். பின்னர் ஐதராபாத் கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஸ்ரீதேஜின் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நேற்று நேரில் சென்று விசாரித்தார்.

மருத்துவமனைக்கு நேரில் சென்ற அல்லு அரவிந்த் சிறுவனின் உடல்நலம் குறித்து அவரின் தந்தையிடம் விசாரித்தார். மேலும், சிறுவன் முழு உடல்நலம் பெற்று திரும்பும்வரை ஸ்ரீதேஜின் குடும்பத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.  

Read Entire Article