திருமலை : ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நகரி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். தம்பதி இருவரும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவது வழக்கம். இதனால் சிறுமி மட்டும் அக்கம் பக்கத்தினரின் கண்காணிப்பில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி காவேட்டிபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (22) என்பவர் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்போது சிறுமி கதறி அழுதுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் மோகன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் வீடு திரும்பிய பெற்றோர், மகள் சோர்வாகவும் உடலில் காயமடைந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதி மக்களிடம் கேட்டபோது பலாத்கார முயற்சி நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நகரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மோகனிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் சிறுமியிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதும், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தனது மனைவியின் தங்கையிடமும் பாலியல் அத்துமீறியதாக அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மோகனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
The post சிறுமி பலாத்கார முயற்சி -திருமணமான வாலிபர் கைது appeared first on Dinakaran.