சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

3 hours ago 2

குடியாத்தம்,

குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் சிறுத்தை தனது குட்டிகளுடன் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் டிராப் கேமரா அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தசூழலில், நேற்று பூங்குளம் மலைப்பகுதியில் பாறை மீது ஓய்வெடுத்து கொண்டிருந்ததாக கூறப்படும் அந்த சிறுத்தை திடீரென கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த சேவல் மற்றும் கோழிக்குஞ்சுகளை விரட்டிவிரட்டி கடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு மலைப்பகுதிக்கு கொண்டு செல்வதில்லை. எனவே, கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதற்கிடையில் தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் வீரிசெட்டிப்பள்ளி பீட் மற்றும் காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். மேலும், அங்குள்ள மரங்களில் டிராப் கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியாத்தத்தில் சிறுத்தை நடமாட்டமுள்ளதால் இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகளை எரியவிட வேண்டும் என்றும், சிறுத்தை நடமாட்டத்தை அறிந்தால் 97155 16707 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Read Entire Article