நன்றி குங்குமம் தோழி
இன்று உணவு சம்பந்தமான தொழில் என்பது முக்கியமான பிசினஸ். ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், சிறு தானிய உணவுகள் எனப் புதிது புதிதாக நிறைய பேர் இந்தப் பிசினஸில்
இறங்கிக் கொண்டே இருக்கின்றனர். இதில் சில பேர் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். பிசினஸ் தாண்டி, ஆரோக்கியமான உணவைத் தர வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள் இந்துமதி, வெங்கடேஷ் தம்பதியினர். இவர்கள் ‘கங்கா’ என்ற பெயரில் சிறு தானிய லட்டு தயாரிப்பில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்கள். பெண்களால் மட்டுமே இயங்கி வரும் இந்த நிறுவனம், தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் அமைந்திருக்கிறது. சீட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு, வெள்ளை சோளம் நட்ஸ் லட்டு, கடலை லட்டு, கம்பு நெய் லட்டு, சிறுதானிய நெய் லட்டு, சிறுதானிய நட்ஸ் லட்டு, பாசிப்பருப்பு நெய் லட்டு, தினை நெய் லட்டு, ஆளி விதை நட்ஸ் லட்டு, கருப்பு உளுந்து நெய் லட்டு, சிறுதானிய மால்ட், ராகி மால்ட், சிறு தானிய மாவு, கருப்பு உளுந்து மால்ட், உளுந்து களி மாவு, எள்ளு சீடை, கேழ்வரகு நெய் லட்டு என இவர்களின் தயாரிப்புப் பட்டியல் நீள்கின்றன.
‘‘என்னுடைய சொந்த ஊர், தேனி. திருமணத்துக்குப் பிறகு சென்னையில் குடியேறி, அங்கேயே எஞ்சினியரிங் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் பார்த்து வந்த வேலையில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்றால் வெளிநாடு அல்லது வட மாநிலங்களுக்குத்தான் போக வேண்டும். அதனால் சொந்த ஊருக்கே வந்து ஏதாவது ஒரு பிசினஸை செய்ய வேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது. இந்நிலையில் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவரைப் பார்த்துக்கொள்வதற்காக ஊருக்கு வந்தாக வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் ஊரில் விவசாயமும் போய்க்கொண்டிருந்தது.
அதையும் கவனிக்க ஆள் தேவைப்பட்டது. அப்பா, வயதான தாத்தா, பாட்டி மற்றும் விவசாயத்தையும் கவனிக்க வேண்டும் என்பதற்காக, 2019-லேயே ஊருக்கு வருவதற்கு நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஆனால், மகளின் கல்விக்காக சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் திட்டம் தள்ளிப்போனது. 2020ல் தான் ஊருக்கு வருவதற்கான எல்லா சூழலும் கூடி வந்தது.
ஊருக்கு வந்து பிசினஸைப் பற்றி முடிவு செய்து, களத்தில் இறங்குவதற்குள்ளேயே கொரோனா வந்து, லாக்டவுன் போட்டுவிட்டார்கள்’’ என்கிற வெங்கடேஷ் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர், அவரது மனைவி இந்துமதி கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படித்தவர். லட்டு தயாரிப்பின் உற்பத்தி நிர்வாகத்தை இந்துமதி கவனித்துக்கொள்ள, மூலப் பொருட்கள் கொள்முதல் மற்றும் மார்க்கெட்டிங் வேலைகளை வெங்கடேஷ் பார்த்துக்கொள்கிறார்.
‘‘எங்கள் இருவருக்குமே உணவு விஷயத்தில் ஆர்வம் இருந்ததால், ஏதாவது உணவு சார்ந்து பிசினஸ் செய்யலாம் என்று திட்டமிட்டோம். அந்த நேரத்தில் கொரோனா வந்தது எங்களுக்கு ஒரு
வகையில் வழிகாட்டியாக அமைந்தது. காரணம், மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகளின் மீது ஆர்வம் திரும்பியது. அதனால் ஆரோக்கியமான உணவைக் கொடுத்தால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று நினைத்தோம். அதை தொடங்குவதற்கான முன் அனுபவம் எங்களுக்கு இல்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இறங்கினோம்.
என் மாமியார் நன்றாக சமைக்கக்கூடியவர். பாரம்பரியமான பல உணவுப் பதார்த்தங்களை எப்படி தயார் செய்வது என்பதை நன்கு அறிந்தவர். முதலில் நல்ல தரமான எள்ளு சீடை, அதிரசம், மிக்சர், காரா சேவு மற்றும் சீவல் தயாரித்து விநியோகம் செய்தோம். இவ்விதமான தயாரிப்புகள் விற்பனை செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். நாம் ஏன் உடலுக்கு நல்லது செய்யும் சிறு தானியங்கள் பக்கம் போகக்கூடாது என்று நினைத்து, அதில் இறங்கினோம். முதலில் ஒரு சில சிறுதானியங்களில் லட்டு தயாரித்தோம். பிறகு வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சிறு தானியங்களில் பலவகையான உணவுப் பொருட்கள் செய்து தர ஆரம்பித்தோம்…’’ என்று பிசினஸ் ஆரம்பித்த நாட்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்தார் இந்துமதி.
‘‘வீட்டில் ஒரு அம்மா எப்படி குழந்தைகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பாரோ, அதுமாதிரிதான் நாங்களும் தரமான உணவு வகைகளையும் செய்கிறோம். சுகாதாரம், உயர் தரம், பாரம்
பரியம்தான் எங்களின் நோக்கம். லாக்டவுன் காலத்தில் ஆரம்பித்ததால், நானும் அத்தையும் மட்டுமே சேர்ந்து முறுக்கு, மிக்சர், தட்டை, எள்ளு சீடை, பட்டர் சீடை, லட்டு, மைசூர்பான்னு நிறைய செய்தோம். தீபாவளி நேரத்தில் அருகில் உள்ள ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் இருந்து எங்களின் தரம் மற்றும் சுவை பிடித்ததால் மொத்தமாகவே ஆர்டர் கொடுத்தனர். ஒரு வாரம் இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்தோம். மாமாவும், கணவரும் பேக்கிங்கைப் பார்த்துக்கொண்டனர்.
ஆர்டர்கள் அதிகமாக வந்ததால் இரண்டு, மூன்று பேரை வேலைக்குச் சேர்த்துக்கொண்டோம். அதற்குப் பிறகுதான் சிறுதானிய இனிப்பு வகைகளைச் செய்யத் தொடங்கினோம். ஆரம்பத்தில் 3 கிலோ லட்டு தயாரித்து விற்பனை செய்தோம். நாளடைவில் 10, 30, 100 கிலோ லட்டு செய்ய ஆர்டர்கள் வந்தன. இதை தனியாக செய்ய முடியாது என்று முதலில் 10 பெண்களை வேலைக்குச் சேர்த்தோம். இப்போது 23 பெண்கள் வேலை செய்கின்றனர். எங்க நிறுவனத்தில் வேலை செய்கிற அனைத்துப் பெண்களும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பினேன்’’ என்றார் இந்துமதி.
‘‘ஆரம்ப நாட்களில் மாவு அரைப்பதற்கு வெளியில்தான் கொடுத்திருந்தோம். அது நாங்க எதிர்பார்த்த தரத்தில் இல்லை. அதனால் லோன் போட்டு சொந்தமாகவே இயந்திரம் வாங்கி மாவு அரைக்கத் தொடங்கினோம். வெள்ளைச் சர்க்கரை மற்றும் பிரிசர்வேட்டிவ்களை நாங்க பயன்படுத்துவதில்லை. தேனியைச் சுற்றி இருக்கும் பகுதிக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். மற்றவர்கள் ஆன்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். எங்களிடம் ஒரு முறை வாங்கியவர்கள் திரும்பவும் வருகின்றனர்.
பிசினஸ் ஆரம்பித்த நாட்களில் எங்கே முதல் தரமான மூலப்பொருட்கள் கிடைக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடிப்பதே பெரிய வேலையாக இருந்தது. கம்பு, கேழ்வரகு, தினை, பாசிப்பருப்பு, கடலை, கருப்பு உளுந்து, வெல்லம் போன்றவற்றை நேரடியாக மில்லிலிருந்தே கொள்முதல் செய்கிறோம். சீடை வகைகளுக்கு செக்கில் ஆட்டிய கடலை எண்ணெயைப் பயன்படுத்துகிறோம்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுசுழற்சி செய்கிறவர்களிடம் கொடுத்துவிடுவோம். அதே போல் பாரம்பரியமான முறையில் காய்ச்சிய முதல் தரமான நெய்யைதான் பயன்படுத்துகிறோம்’’ என்று சொல்லும் வெங்கடேஷ், இந்துமதி தம்பதியினரின் எதிர்காலத் திட்டம் எந்தெந்த வகையில் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் தரவேண்டும் என்பதுதானாம்.
தொகுப்பு: த.சக்திவேல்
The post சிறுதானிய லட்டு தயாரிப்பில் லாபம் ஈட்டும் தம்பதியினர்! appeared first on Dinakaran.