
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வாகன வரி உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்தியது போதாது என்று, புதிதாக சிறு கனிம நில வரியை அறிமுகப்படுத்தி மக்களை வாட்டி வதைத்துள்ளது தி.மு.க. அரசு.
கடந்த சில தினங்களாக, தமிழ்நாடு அரசின் கனிம வளத்துறை புதிதாக விதித்துள்ள சிறு கனிம நில வரியைக் கைவிடுவது உள்ளிட்ட 24 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தி.மு.க. அரசு இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், புதிதாக விதிக்கப்பட்ட வரியை உடனே ரத்து செய்ய இயலாது என்றும், அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் தெரிவித்து, புதிய வரி விதிப்பிற்கு ஏற்ப ஜல்லி, எம். சாண்ட், பி. சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள அனுமதித்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட் ஜல்லி விலை நான்காயிரம் ரூபாயிலிருந்து ஐயாயிரம் ரூபாயாகவும், ஒரு யூனிட் எம். சாண்ட் விலை ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரம் ரூபாயாகவும், ஒரு யூனிட் பி. சாண்ட் விலை ஆறாயிரம் ரூபாயிலிருந்து ஏழாயிரம் ரூபாயாகவும் உயர்ந்து இருக்கிறது.
உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்குமானால், புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, வீடு கட்ட திட்டமிட்டிருக்கும் மக்களையும், அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வீடுகளை வாங்க இருக்கும் மக்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் கூடுதல் நிதிச் சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, பொதுமக்கள் கூடுதல் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்க்கும் வகையில், புதிதாக விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நில வரி ரத்து செய்யப்பட வேண்டுமென்று சொந்த வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்களின் வீடு கட்டும் கனவினை நிறைவேற்றும் வகையில், சிறு கனிம நில வரியை உடனடியாக ரத்து செய்து, ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.