சிரியாவுக்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல்..?

4 months ago 15

டமாஸ்கஸ்:

சிரியாவின் பெரும் பகுதிகளை கிளர்ச்சிக் குழுக்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் ஆசாத்தின் அரசு கவிழ்ந்தது. அதிபர் ஆசாத், நாட்டைவிட்டு தப்பிச் சென்று ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து சிரியாவில் அரசியல் நெருக்கடி உருவாகி உள்ளது. அதிபர் நாட்டை விட்டுச் சென்றபோதும், பிரதமர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். சுமுகமான முறையில் அதிகார மாற்றம் தொடர்பாக பிரதமரை கிளர்ச்சியாளர்கள் குழு சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காக சிரியா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களிடம் கிடைத்தால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

இஸ்ரேல் படைகள் நாட்டிற்குள் தொடர்ந்து முன்னேறி, தலைநகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்றதாக சிரியாவின் எதிர்க்கட்சி போர் கண்காணிப்பகம் இன்று தெரிவித்தது. ஆனால், தலைநகர் நோக்கி படைகள் முன்னேறுவதாக வெளியான தகவலை இஸ்ரேல் மறுத்துள்ளது.

நேற்று இரவு முழுவதும் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான வான் தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டதாக செய்தி வெளியானது. அழிக்கப்பட்ட ஏவுகணை லாஞ்சர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாது.

ஆனால் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கிளர்ச்சிக் குழுக்கள் இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, சிரியாவிற்குள் சுமார் 400 சதுர கிலோமீட்டர் பாதுகாப்பு மண்டலத்தை இஸ்ரேல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆசாத் அரசு கவிழ்ந்தபின்னர் தாக்குதல்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Read Entire Article