
சென்னை,
பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூரி, "இந்தப் படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதால் இப்படத்திற்கு பாடல்களை எழுதுவதற்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொன்ன பாடலாசிரியர் விவேக்கிற்கு என்னுடைய நன்றி. அவர் மாமன் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கு பெருமை. நாங்கள் நினைத்ததை விட இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அதிலும் மண் சார்ந்த உறவுகளுக்கு உங்களுடைய வரிகள் நெருக்கமாக இருக்கிறது. இதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
' சீம ராஜா 'படத்திற்காக இயக்குநர் பொன்ராம் என்னை சிக்ஸ் பேக் வைத்துக்கொள் என்றார் .இதற்காக ஆறு மாத காலம் கடினமாக உழைத்தேன். என்னுடைய மனைவியும் உதவி செய்தார். இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்ப்பதற்காக ஆவலுடன் குடும்பத்துடன் சென்றேன். ஆனால் அந்த சிக்ஸ் பேக் திரையில் 59 வினாடிகள் தான் இடம்பெற்றது. சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் அதுதான் என்னை இந்த அளவிற்கு உயர்வதற்கான நம்பிக்கையை விதைத்தது. அன்று அது போன்றதொரு வாய்ப்பை நீங்கள் எனக்கு வழங்கவில்லை என்றால்.. தற்போது என் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அதனால் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம். இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது 'சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி'. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்துதான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை சொல்லி இருக்கிறேன். குடும்பத்தில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் தங்கை என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் ஸ்பெஷலான உறவு என்றால்.. அது தாய் மாமன் உறவு தான். தாய்க்குப் பிறகு தாய் ஸ்தானத்தில் இருக்கும் ஒரு உறவு என்றால் அது தாய் மாமன் தான். தாய் மாமனை பற்றி பல படங்கள் வெளியாகி இருக்கிறது. உங்கள் குடும்பத்தை மே 16ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களுக்கு இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும். '' என்றார்.