
சென்னை,
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். இவர் தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந் தேதி வெளியாக உள்ளது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சிம்பு மற்றும் ஆர்யா கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சந்தானம், இப்போது சினிமாவில் நான் இருக்க காரணம் சிம்பு சார் என்றார். அதாவது, சிம்பு இல்லைனா இன்னைக்கு நான் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் சிம்பு குறித்து அவர் கூறியது, "காதல் அழிவதில்லை என்ற படத்தில் கூட்டத்தில் ஒருவனாக நடித்து இருந்தேன். அப்போது என்னை பார்த்த சிம்பு சார் 'மன்மதன்' படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கு பில்டப் சீன் ஒன்று வைக்க வேண்டும் என்றார். அப்போது திரைகளில் நல்ல கைத்தட்டல் கிடைக்கும் என்று கூறினார். அன்றுமுதல் இன்றுவரை எனக்கு கைத்தட்டல் கிடைக்க வேண்டும் என பல விஷயம் செய்துள்ளார். ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் பேசுவார். எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன்" என சந்தானம் கூறியுள்ளார்.