
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.
மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இமயமலையில் இருந்து ஜம்மு- காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அச்சுறுத்தல் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது. மேலும், அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, முன்னதாக, இந்தியாவிற்கு உரிமையான நதி நீர் எல்லைதாண்டி பாய்ந்தது ஆனால் தற்போது இந்தியாவுக்கு உரிமையான நீர் இந்தியாவிற்குள்ளேயே பாந்து, இந்தியாவுக்குள்ளே இருந்து, இந்தியாவுக்கு பணியாற்றும்' என்றார்.