
சென்னை,
தமிழக அரசு போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கி வருகிறது. கடந்த வருடம் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நிறைய மாணவ, மாணவிகள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். தேர்வாகியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. மற்றும் ரெயில்வே தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் மாணவ, மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக திறன் மேம்பாட்டு கழகம், நான் முதல்வன் திட்டத்தில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), ரெயில்வே, வங்கிப்பணி ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கும் தமிழக இளைஞர்களுக்கு 6 மாத இலவச பயிற்சி வழங்கி வருகிறது.
இந்த பயிற்சியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் மாணவ, மாணவிகள் சேரலாம். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு 2 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, வங்கித்தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு, எஸ்.எஸ்.சி. மற்றும் ரெயில்வே துறை தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இதில் ஏதேனும் ஒன்றில் மட்டும் மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியும். இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் வருகிற 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.