சின்னமனூர் அருகே ஊருணி சீரமைக்கும் பணி தீவிரம்

2 weeks ago 5

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சியில் மேலப்பட்டி, சமத்துவபுரம், சுக் காங்கல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டி தென்பழனி, வெள்ளையம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். தமிழக அரசின் உத்தரவின் பேரில் இப்பகுதியில் உள்ள ஊருணிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகளில் அகற்றி சீரமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளையம்மாள் புரம் ஊருணியில் சுமார் 1 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை ஆகியவை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தற்போது அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.54 லட்சம் நிதியில் ஊருணியை சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊருணி முழுமையாக தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் கரைகளைப் பலப்படுத்தி கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் ஊருணியை ஒட்டியுள்ள சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் நடைபாதையை மறித்து, போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டு வருவதையும், மாடுகள் கட்டிவைக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஊருணி சீரமைப்புப் பணி சுமார் 70 சதவீதம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு விட்டதால், கோடை காலம் முடியும் முன் ஊருணி முழுவதுமாக சீரமைக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post சின்னமனூர் அருகே ஊருணி சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article