
சென்னை,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், நடிகை திரிஷா, நடிகர் சிம்பு ஆகியோர் அளித்த பேட்டி ஒன்றில், 'தக் லைப்' படத்தில் பணியாற்றியது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது;-
"நான் எனது அண்ணன், அப்பாவை பார்த்துதான் நடக்க கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கை, அதுதான் நடிப்பு. மக்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் போதும், ஒவ்வொருவரிடமும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அனைத்தையும் என்னால் செய்ய முடியுமா என்பது தெரியாது. ஆனால் அவர்களிடம் இருந்துதான் நான் கற்றுக்கொள்கிறேன்.
தற்போது இருக்கும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லாவிட்டால் எங்களுக்கு வாழ்க்கையுடன் தொடர்பு விட்டுப் போயிருக்கும். இதுபோன்ற ஊடகங்களால்தான் நான் அரசியலுக்கு சென்றேன். ஊடகங்கள் செய்யு நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன்.
எங்களை நட்சத்திர அந்தஸ்தில் தூக்கி வைத்து எதையும் செய்ய விடாமல் தடுத்து விடுவார்கள். சாதாரண வாழ்க்கையை இழந்தவர்கள் நாங்கள். அதனால்தான் சிலர் விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதை 3 வயதில் இருந்து நானும், சிம்பும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் மொபைல் போனில் உங்களுக்கு தெரியாமல் உங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கிருந்துதான் எங்களுக்கு தேவையான கதாபாத்திரங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்."
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.