
புதுடெல்லி,
நடப்பு ஐ.பி.எல். தொடரில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த அணியின் சிறப்பான செயல்பாடுகளுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளவர் கே.எல்.ராகுல்.
கடந்த ஆண்டு லக்னோவுக்காக ஆடிய ராகுல் இந்த சீசனில் அந்த அணியில் இருந்து விலகி மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். அவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது. தற்போது டெல்லிக்காக மிகச்சிறப்பாக ஆடி வரும் ராகுல் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக உள்ளார். நடப்பு தொடரில் டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வருகிறார்.
ஐ.பி.எல் இல்லாத நேரங்களில் வர்ணனை செய்து வரும் பீட்டர்சன் இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து எப்போதுமே விமர்சனத்தை வைக்கக் கூடியவர். அப்படி கே.எல் ராகுல் குறித்தும் அவர் பலமுறை விமர்சித்துள்ளார். அதற்கு கே.எல். ராகுலும் தனது கருத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். காரசாரமாக மோதிக்கொண்ட இவர்களுக்கு பெரிய நட்பு என்பதெல்லாம் கிடையாது.
ஆனால், தற்போது டெல்லி அணியின் நட்சத்திர வீரராக ராகுல் விளையாடி வரும் வேளையில் அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் கெவின் பீட்டர்சன் கே.எல். ராகுலுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், தான் கெவின் பீட்டர்சன் கே.எல். ராகுல் உடனான தனது உறவு குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கே.எல். ராகுலுடன் என்னுடைய நட்பு எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தற்போது அதனை மேம்படுத்தி வருகிறேன். எங்கள் இருவருக்குள் தற்போது நல்ல நட்பு மலர்ந்து வருகிறது. இந்த ஐ.பி.எல் தொடர் முடிவதற்குள் நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விடுவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.