சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர் - பிரதமர் மோடி ஆவேச பேச்சு

5 hours ago 3

பிகானீர்,

பிரதமர் மோடி ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்து, ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். தொடர்ந்து பிரசித்தி பெற்ற கர்ணி மாதா கோவிலுக்கு இன்று காலை 10.30 மணியளவில் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அவருடன் ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மாவும் சென்றார். கோவிலில் சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியின் வருகையால் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அவரை கவுரவிக்கும் வகையில் கோவிலில் சிறப்பு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சமீபத்தில் இந்திய ஆயுத படைகள் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்த கோவிலுக்கு அவர் செல்வது முதன்முறையாகும். ராஜஸ்தானின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்துடனான பிரதமர் மோடியின் வலுவான தொடர்பை இது எடுத்து காட்டுகிறது.

இதனை தொடர்ந்து, அவர் தேஷ்னோக் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையம் ஒன்றை தொடங்கி வைத்து, பிகானீர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார். அவருடன் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரும் சென்றனர்.

இதனை தொடர்ந்து, சாலை வழியாக 8 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து பலானா கிராமத்திற்கு சென்றடைந்த அவர், பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனை காண 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்பதற்காக, இருக்கை வசதிகள் மற்றும் பெரிய பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்நிலையில், கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இன்று ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாவதற்காக, இந்தியாவில் நவீன உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வந்தே பாரத், அம்ரித் பாரத் மற்றும் நமோ பாரத் ரெயில்கள், நம்முடைய நாட்டின் வேகம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது. ஆளில்லா ரெயில்வே கிராசிங் விவகாரம், கடந்த காலத்துடன் முடிந்து போயுள்ளது. 1,300-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்கள் அடுத்தடுத்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.

100-க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் தயாராக உள்ளன என்று பேசியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது, பஹல்காமில், மதம் என்ன கேட்கப்பட்டு, நம்முடைய சகோதரிகளின் முன்நெற்றியில் இருந்த சிந்தூர் அழிக்கப்பட்டது. ஆனால், 140 கோடி இந்தியர்களும் அதன் வலியை உணர்ந்தனர். அந்த பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்து பார்க்க முடியாத தண்டனை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

நம்முடைய தீரமிக்க படைகள் அந்த செயலை தீர்க்கமுடன் நிறைவேற்றின. முப்படைகளுக்கும் அரசு சுதந்திரம் அளித்தது. இதனால், பாகிஸ்தான் மண்டியிட்டது. சிந்தூரம் அழிப்பதற்காக புறப்பட்டவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டனர். இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டு விட்டன.

இந்தியா அமைதியாக இருக்கும் என நினைத்தவர்கள், இன்று வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். ஆயுதங்களை நினைத்து பெருமை கொண்டவர்கள், அதன் இடிபாடுகளில் புதைக்கப்பட்டு உள்ளனர் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

Read Entire Article