
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் முகேஷ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 181 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சமீர் ரிஸ்வி 39 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இந்த ஆட்டத்தில் டெல்லி வீரர் கே.எல். 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் முந்தைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த 12 ரன்களையும் சேர்த்து நடப்பு சீசனில் 500 ரன்களை கடந்தார். இவர் ஒரு சீசனில் 500 ரன்களை கடப்பது இது 7-வது முறையாகும்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சீசன்களில் 500 ரன்களை கடந்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த டேவிட் வார்னரை சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியை (8 முறை) நெருங்கியுள்ளார்.
வார்னர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் கோலியை முந்த கே.எல். ராகுலுக்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்த ஓய்வு பெற்ற விராட் இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என்பது தெரியவில்லை. இருப்பினும் கோலியை விட கே.எல்.ராகுல் அதிக ஐ.பி.எல். சீசன்களில் விளையாடுவார் என்பதால் கோலியை முந்த கே.எல்.ராகுலுக்கு வாய்ப்புள்ளது.
அந்த பட்டியல்:
1. விராட் கோலி - 8 முறை
2. டேவிட் வார்னர்/கே.எல்.ராகுல் - 7 முறை
3. ஷிகர் தவான் - 5 முறை