
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தமிழ் இயக்கியிருந்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான இப்படம் விக்ரம் பிரபுவிற்கு "கம் பேக்" ஆகவே அமைந்தது. கடைசியாக 2023-ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.
'அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' பட புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் கவனிக்க , தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி மேற்கொண்டிருக்கிறார். கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் - ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது.
"லவ் மேரேஜ்" படத்தின் "கல்யாண கலவரம்" பாடலை படக்குழு வெளியாகி வைரலானது. இப்பாடலை ஷான் ரோல்டன் இசையமைத்து பாடியுள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான ஷான் ரோல்டன் எழுதி, பாடியிருக்கிறார். உற்சாகத்தை பரவச் செய்யும் பெப்பியான பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் "பேஜாரா ஆனேன்" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை சிவாங்கி பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட புதிய அப்டேட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.