
கடந்த 2019-ம் ஆண்டு நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேல் என்ற இளைஞரை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து விசாரணை என்ற பெயரில் தாக்கியதாக, நெல்லை டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விமலன் மற்றும் காவலர் மகாராஜன் மீது அவரது தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில், போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பேச்சிவேலை பிடிக்க முயன்றபோது அவர் விழுந்ததில் காயம் ஏற்பட்டது என கூறி புகாரை தள்ளுபடி செய்ய போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த புகார் மீதான இன்றைய விசாரணையின்போது, பேச்சிவேலுவின் காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியதை போலீசார் மறைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், அவர் எப்போது கைது செய்யப்பட்டார்? முதலுதவி அளிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் மறைத்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த இழப்பீடு தொகையை உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.