
டெல்லி,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவானது. அதேவேளை, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதன்படி, பாதுகாப்புக்கான மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்த 23ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதிநீரை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்தது.
இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பலர் உயிரிழந்தனர். தற்போது இரு தரப்பிற்கும் இடையே தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெஸ்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நல்லெண்ணம் மற்றும் நட்பு அடிப்படையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், எல்லைதாண்டிய பயங்கரவாதம் மூலம் பாகிஸ்தான் அந்த நெறிமுறைகளை மீறிவிட்டது. எல்லைதாண்டிய பயங்கரவாதம் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காதவரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் மீதான ரத்து நீடிக்கிறது' என்றார்.