
சென்னை,
பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.அவர்கள் சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம்.
பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் மற்ற நாட்களைவிட பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு கிரிவலத்திற்கு சுமார் 25 லட்சம் முதல் 30 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
இந்தநிலையில், திருவண்ணாமலைக்கு மே 11, 12 ஆம் தேதி சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,திருவண்ணாமலைக்கு நாள்தோறும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, 11ம் தேதி மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு நாள்தோறும் இயங்கக்கூடிய பஸ்களுடன் 1940 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். அதே போல் , 12ம் தேதி 1530 பஸ்களும் இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் இருந்து 11ம் தேதி 1156 பேருந்துகளும், 12ம் தேதி 966 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து 2 நாட்களும் தலா 150 பேருந்துகளும் இயக்கப்படும்.அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்ப்பில் இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதனம் கொண்ட 40 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி , ஈரோடு ,வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மக்கள் திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து மூலம் செல்ல விரும்பினால் (TNSTC) டி.என்.எஸ்.டி.சி இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.