நன்றி குங்குமம் தோழி
மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய படம் என்றாலும், படத்தில் எமோஷனை விட காமெடிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம்.
பல்வேறு கருத்துக்களையும் படம் நமக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.அறிவுசார் குறைபாடுக் குழந்தைகளின்(intellectual disability) அக உலகம்… அதில் வெளிப்படும் கள்ளங்கபடமற்ற தன்மை… அவர்களின் பிரச்னைகளை, அதாவது, அப்பா, அம்மா சண்டை குறித்து பயணத்தில் பேசுவது… கோபத்தை பிடித்து வைத்துக்கொள்ளாமல் சரியென்று விட்டுவிட்டு அடுத்த விஷயத்திற்குள் செல்வது… வெற்றியோ, தோல்வியோ விளையாட்டாய் எடுத்துக்கொள்வது… விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்பதற்காக யதார்த்தத்தை மீறிய காட்சிகளை சாகசமாய் காண்பிக்காதது என வழக்கத்திற்கு மாறான திரை அனுபவத்தைக் கொடுக்கும் படமாக, ஃபீல்குட் மூவியாக மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா.
டெல்லி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனில் பேஸ்கட்பால் ஜூனியர் பயிற்சியாளராக இருக்கிறார் அமீர்கான். போட்டி ஒன்றின் போது தனது சீனியர் பயிற்சியாளருடன் வாக்குவாதம் ஏற்பட, அமீர்கானின் உயரத்தை வைத்து அவரை கிண்டல் செய்கிறார் சீனியர். உடனே அவரை சட்டென கன்னத்தில் அறைந்துவிடுகிறார் அமீர்கான். அன்று இரவே குடித்துவிட்டு மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, போலீஸ் வாகனம் ஒன்றின் மீது மோதி காவல்துறையிடம் அமீர்கான் மாட்ட, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவரின் நடத்தை விமர்சனத்துக்கு உள்ளாக, அறிவுசார் சவால் உள்ள விளையாட்டு வீரர்களை ஒருங்கிணைத்து, மூன்று மாத காலம் அவர்களுக்கு கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார் நீதிபதி.
மற்றவர்களைக் கேலி, கிண்டல் செய்யும் குணம் கொண்ட அமீர்கானுக்கு மாற்றுத்திறனாளிகளை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயார் செய்கிற பணி கொடுக்கப்படுகிறது. துவக்கத்தில் அறிவுசார் குறைபாடு மாணவர்களை பைத்தியங்களாக நினைக்கிறார் அமீர்கான். ஆனால், போட்டிக்கு தயார் செய்யும் போது அவர்களின் உணர்வுகளை புரிந்து நல்ல மனிதனாக மாறுகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.
‘சாம்பியன்ஸ்’ எனும் ஸ்பானிஷ் படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தில், சிறு வயதில் தந்தை விட்டுச் செல்ல, தாயின் அரவணைப்பில் வளரும் சிறுவனாக அமீர்கான். அவர் வளர்ந்து பெரியவனாகி இந்த சமூகத்தில் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும், தனது உயரத்தை வைத்து பிறர் கிண்டல் செய்யும் காட்சிகளில் அதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும், தனது யதார்த்த நடிப்பின் வழியாக முகபாவனைகளில் காட்டி அனைவரையும் கவர்கிறார். அமீர்கான் மனைவியாக நடிகை ஜெனிலியா இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் பெறுகிறார்.
அறிவுசார் குறைபாடு இளைஞர் பட்டாளம் தங்களின் கதாபாத்திரங்களுக்குக் கனகச்சிதமாய் உயிர் கொடுத்து படத்தை அதகளப்படுத்தி இருக்கிறார்கள். படம் முழுவதும் கலகலப்பாய் நகர்வதற்கும், ஃபீல் குட் எமோஷனை வரவழைப்பதற்கும் இவர்கள்தான் முக்கியக் காரணமே. நாயகனின் தாயாக வருபவரின் கதாபாத்திரமும், மாற்றுத்திறனாளிகள் மேலாளர் பேசுகிற கூர்மையான வசனங்களும் சிந்திக்க வைக்கும் ரகம்.
‘‘விதி என்பது கைரேகைகளில் எழுதப்படுவதில்லை… நமது குரோமோசோம்களில் எழுதப்படுவது. இருபத்திமூன்று குரோமோசோம்களில் ஒன்று இடம் மாறியிருந்தாலும் நாமும் இன்டலெக்சுவல் டிசபிளிட்டிதான்” என்ற வசனம் வரும் காட்சியில் பதட்டம் நம்மையும் பற்றிக்கொள்ளும். ‘‘எது நார்மல்? யார் நார்மல்? என்பதெல்லாம் அவரவரின் அகநிலைப் பொறுத்ததே!”, ‘‘அவங்களுக்கு நான் எதையும் சொல்லிக் கொடுக்கல, அவங்ககிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன்” எனப் போகிற போக்கில் வரும் யதார்த்த வசனமும் படத்தின் பலம்.
மாணவர்களை விட்டுப் பிரியும் காட்சியில் கண்கலங்கிய படி வருகிற அமீர்கானைப் பார்த்து, “சார், நீங்க செத்துப் போகப் போறீங்களா சார்” என அப்பாவித்தனமாய் மாணவர்கள் கேட்கும் காட்சியாகட்டும், இறுதிக் காட்சியில் “சார், நாம இரண்டாவது இடம் வந்துட்டோம்” என எதிர் அணியை இறுக்கி அணைத்துக் கொண்டாடுவதாகட்டும் மொத்த படத்திற்குமான மாஸான காட்சிகள்.
மாற்றுத்திறனாளிகள் தங்களின் புறஉலகை எப்படியாகப் பார்க்கிறார்கள் என்பதையும், தங்களின் அக உலகில் அவர்கள் கள்ளம் கபடமற்று, சூதுவாது தெரியாத வெள்ளைக் காகிதமாய் இருப்பதையும் அழுத்தமாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். அதேபோல் கூடைப்பந்து போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பயிற்சிக்கான மெனக்கெடுதல்களையும் கூடுதல் அழுத்தத்துடன் காட்சிப்படுத்தி இருந்தால் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ந்திருக்கும்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில், நடிகர் அமீர்கான் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவது நெருடல் என்றாலும், கிளைமேக்ஸில் அவர்களை முழுதாய் புரிந்துகொண்டு பேசும் வசனம் கலங்க வைக்கின்றது.பார்க்க வேண்டிய படங்களின் தரவரிசையில் ‘சித்தாரே ஜமீன் பர்’ இடம்பிடிக்கிறது. படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டாலும், தமிழ் மொழியில் பொருத்தமாகவே டப் செய்யப்பட்டு இருப்பதால் அனைவரும் பார்க்கலாம்… ரசிக்கலாம்… சிரிக்கலாம்… சிந்திக்கலாம்!
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
The post சித்தாரே ஜமீன் பர் appeared first on Dinakaran.